மனுக்களோடு வாருங்கள்; பணத்தோடு வந்தால் அனுமதி இல்லை

முதல்-அமைச்சர் விஜய் வகுத்து கொடுத்த லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான பாதையில் அதிகாரிகள் பயணிக்கத் தொடங்கி விட்டனர்.
மனுக்களோடு வாருங்கள்; பணத்தோடு வந்தால் அனுமதி இல்லை
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்த உடனேயே மக்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் இருக்க லஞ்சத்துக்கு எதிராக சாட்டையை சுழற்றினார். டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களுக்கு லஞ்சமாக கொடுத்து வந்த பணத்தை ஒரு ரூபாய் கூட வேறு எங்கும் கொடுக்க வேண்டாம் என்று கூறி மடைமாற்றி அரசின் கஜானாவுக்கு திருப்பிவிட்டார். இதனால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களின் நிறுவனங்களுக்கு கூட நேர்மையான முறையில் அனுமதியும், அவர்களிடம் கொள்முதலை நடத்தியதும் வியப்பை கொடுத்தது. பாரபட்சம், சலுகை காட்டாமல் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் சமமான முறையில் கொள்முதல் செய்துவருவது விமர்சனங்களுக்கு வழிவகுத்தாலும், அந்த நிலையே தொடர்கிறது. ஜூன் மாதம் 23-ந்தேதி சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேசும்போது, மிகவும் ஆவேசமாக மக்கள் பணத்தை தொடமாட்டோம், தொடவும் விடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம் என்று சொன்னது லஞ்ச ஒழிப்புத்துறையை முடுக்கி விட்டது.

தமிழக அரசின் டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை இருந்து வருகிறது. ஒப்பந்த புள்ளியில் குறைவான தொகையை குறிப்பிடுபவர்களுக்கு தங்கு தடையில்லாமல் ஒப்பந்தம் கிடைத்து வருகிறது. முன்பு வழங்கப்பட்ட பல டெண்டர்கள், முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்களோடு அதிகம் தொடர்புடையதும், பணப்புழக்கம் அதிக உள்ள அலுவலகங்களில் ஒன்றான பதிவுத்துறையின் சார்பதிவாளர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், சோதனைச்சாவடிகள் என்று பல அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து சோதனை நடத்தினார்கள். அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் 9498180936 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த எண்ணை மனதில் பதிந்து வைத்திருக்க சிரமமாக இருக்கிறது. எனவே 100, 108 என்பதுபோல மூன்று இலக்க எண்ணை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைக்கிறார்கள். அதையும் தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

முதல்-அமைச்சர் விஜய் வகுத்து கொடுத்த லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான பாதையில் அதிகாரிகள் பயணிக்கத் தொடங்கி விட்டனர். அந்த வகையில், மானாமதுரையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கிருஷ்ணகுமார் நூதனமான அறிவிப்பு பலகை வைத்திருக்கிறார். அதில், "வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வரவேண்டும். பணம் வைத்து இருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை" என்று குறிப்பிட்டுள்ளதோடு, அலுவலகத்தின் நுழைவுவாயிலில், "லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம்" என்ற அறிவிப்பையும் வைத்திருக்கிறார்.

இதை ஒரு மாதிரி தாலுகா அலுவலகம் என்றே கூறலாம். அய்யன் திருவள்ளுவர், "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்று கூறினார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் செய்ததுபோல அனைத்து அரசு அலுவலகங்களும் இதே நடைமுறைகளை பின்பற்றினால் மக்களும் நேர்மையான அரசு அலுவலகத்துக்கு செல்கிறோம் என்ற பெருமையுடன் வெறுங்கையை வீசிக்கொண்டு மனுக்களோடு செல்ல முடியும். அரசு ஊழியர்களும் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற கவுரவத்தோடு நெஞ்சை நிமிர்த்தி என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று யாருக்கும் அஞ்சாமல் அலுவலகத்துக்குள் வர முடியும், பணி முடிந்து மனநிறைவோடு வீட்டுக்கும் செல்லமுடியும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com