

17-வது தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு பல வரலாறுகளை எழுதியிருக்கிறது. 59 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட இயக்க ஆட்சிகளுக்கு மாற்றாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மை கிடைக்காததால் தனித்து ஆட்சி அமைக்கமுடியவில்லை.
17-வது தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு பல வரலாறுகளை எழுதியிருக்கிறது. 59 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட இயக்க ஆட்சிகளுக்கு மாற்றாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மை கிடைக்காததால் தனித்து ஆட்சி அமைக்கமுடியவில்லை.
இதனால் த.வெ.க. கடந்த 10-ந்தேதி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைத்தது. அப்போது முதல்-அமைச்சராக விஜய்யும், 9 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். நேற்று மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இதில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.
விஜய்யின் அமைச்சரவை முதல்முறை என்ற பின்னணியை பல விஷயங்களில் கொண்டது. அதாவது, கடந்த 74 ஆண்டுகளுக்கு பிறகு அமைக்கப்பட்ட முதல் கூட்டணி ஆட்சியாகும். இந்த அமைச்சரவை அதிக இளைஞர் பட்டாளங்களைக் கொண்டதாகும். இதை பதவிப்பிரமாணம் செய்துவைத்த கவர்னரே பாராட்டியிருக்கிறார். மேலும் உலகையே ஆட்சி செய்யும் செயற்கை நுண்ணறிவுக்கும், தகவல் தொழில்நுட்பத்துக்கும் என தனி அமைச்சரை முதல்முறையாக நியமித்திருக்கிறார்.
இதில் சிறப்பம்சமாக 4 பெண் அமைச்சர்கள் அமைச்சரவையை அலங்கரிக்கிறார்கள். விஜய் மன்றத்தில் இருந்தவர்களுக்கே பெரும்பாலும் அமைச்சர்களாக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இளம் ரத்தம் பாயும் துடிப்புமிக்க அமைச்சரவையில் செங்கோட்டையனை தவிர யாருமே அனுபவம் இல்லாதவர்கள். அமைச்சரவையில் ஜாக்பாட் என்றால் அது காங்கிரஸ் கட்சிக்குத்தான்.
1967-ல் தி.மு.க.விடம் ஆட்சியை பறிகொடுத்த பிறகு, மீண்டும் ஆட்சி அமைத்தே தீருவோம் என்று காங்கிரஸ் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தது. ஆனாலும் அக்கட்சிக்கு ஆட்சி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. 1984-ல் எம்.ஜி.ஆர். உடன் கரம் கோர்த்து 61 இடங்களிலும், 1991-ல் ஜெயலலிதா உடன் கூட்டணி அமைத்து 60 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும் ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு கிடைக்கவில்லை.
2006-ல் தி.மு.க. 96 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 34 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரசின் ஆதரவு இருந்தால்தான் ஆட்சியமைக்கமுடியும் என்ற சூழ்நிலையில் மைனாரிட்டி அரசாங்கம் அமைந்தது. அந்த நேரத்திலும் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கிடைக்கவில்லை.
இப்போது வெறும் 5 இடங்களை மட்டும் வைத்துக்கொண்டு த.வெ.க. உடன் புதிதாக ஒட்டி உறவாடி வரும் காங்கிரஸ் கட்சியின் அன்றைய மூத்த தலைவரான பொன்னப்ப நாடார் பேரன் ராஜேஷ்குமாருக்கும், மேலூரில் போட்டியிட்டு வாகை சூடிய விஸ்வநாதனுக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆக 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றிருக்கிறார்கள். இதுபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் தலா ஒரு அமைச்சர் இன்று பதவியேற்க போகிறார்கள். ஆக இதுதான் விஜய் சர்க்கார் என்று சொல்லும் வகையில் பல புதுமைகளோடு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.