நெதர்லாந்தில் இருந்து திரும்ப வரும் சோழர் காலத்து செப்பேடு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அருங்காட்சியகத்திலும் வைத்து தமிழனின் பெருமையை பறைசாற்ற வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
நெதர்லாந்தில் இருந்து திரும்ப வரும் சோழர் காலத்து செப்பேடு
Published on

பிரதமர் நரேந்திர மோடி 6 நாட்கள் பயணமாக 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலாவதாக ஐக்கிய அமீரகத்துக்கு சென்றுவிட்டு நெதர்லாந்து நாட்டுக்கு சென்றார். அங்கு அவர், நெதர்லாந்து நாட்டு பிரதமர் ரோப்ஜெட்டனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், கடல்சார் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 17 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டுக்கு சொந்தமான ஒரு அரிய பொக்கிஷமான சோழர் காலத்து 21 செப்பேடுகளை நெதர்லாந்து நாட்டு பிரதமர் பரிசாக திரும்பக்கொடுத்தார்.

இந்த செப்பேடுகள் 18-ம் நூற்றாண்டில் டச்சு ஆதிக்கத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகள் இருந்தபோது 1687 லிருந்து 1700-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து புளோரன்சியஸ் கேம்பர் என்ற பாதிரியாரால் நெதர்லாந்து நாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. செப்பேடு என்பது வரலாற்று தகவல்கள், வழங்கப்பட்ட கொடைகள் போன்றவை பொறிக்கப்பட்ட ஆவணங்களாகும். இதில் அரசு முத்திரை லச்சினையாக பதிக்கப்பட்டிருக்கும். இந்த 21 செப்பேடுகளும் ஆனைமங்கலம் செப்பேடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் 16 செப்பேடுகள் பெரியதாகவும், 5 செப்பேடுகள் சிறியதாகவும் இருக்கின்றன. இவை ஒரு வெண்கல வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த செப்பேடுகள் ஹமேக்கர் குடும்பத்தினர் வசம் சிறிது காலம் இருந்தன. அதன்பின்னர், 1862-ம் ஆண்டு லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு அங்கு மிகவும் மதிப்புக்குரிய ஆவணமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த செப்பேடுகளில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 21-வது ஆட்சி காலத்தில் அவருடைய நெருங்கிய நண்பரும், மலேசிய மன்னருமான ஸ்ரீ விஜய கிடாரத்து அரசன் மாறவிஜயோத்துங்க வர்மன் கி.பி. 1005-ல் நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகார் கோவிலை கட்டினார் என்ற தகவலும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த புத்த விகாரத்துக்கு 97 வேலி பரப்பு கொண்ட ஆனைமங்கலம் கிராமத்தை ராஜராஜ சோழன் வாய்மொழியாக தானம் செய்தார். அவர் 1014-ல் மரணம் அடைந்த பிறகு அவரது மகன் ராஜேந்திர சோழன் இதை எழுத்துப்பூர்வமாக பட்டயம் வெட்டி உறுதி செய்தார். இந்த செப்பேடுகளில் 16 செப்பேடுகள் தமிழிலும், 5 செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும் உள்ளன. இந்த செப்பேடுகள் தமிழக மன்னர்களின் சமய நல்லிணக்கத்தையும், பிற மொழிகளுக்கு மதிப்பு கொடுக்கும் உன்னத உணர்வையும் காட்டுகின்றன. இதை மீண்டும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட கடும் முயற்சியின் பலனாக இந்த செப்பேடுகள் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய செப்பேடுகள் அடுத்த சில நாட்களில் இந்தியாவுக்கு வந்துவிடும்.

தேசிய பொக்கிஷமாக கருதப்பட்டு இந்த செப்பேடுகள் டெல்லி புராண கீலா வளாகத்தில் அமைந்துள்ள இந்திய தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்படுவதுதான் மரபு என்றாலும், இதன் மாதிரிகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அருங்காட்சியகத்திலும் வைத்து தமிழனின் பெருமையை பறைசாற்ற வேண்டும் என்றும், இதுபோல லண்டன் மாநகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்செழியன் வழங்கிய வேள்விக்குடி செப்பேடு உள்பட தமிழ்நாட்டுக்கு சொந்தமான பல கலைப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டு வரவேண்டும் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com