தேர்தல் கமிஷனின் கெடுபிடியால் மக்கள் அவதி

தமிழ்நாட்டில் இப்போது 17-வது சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷனின் கெடுபிடியால் மக்கள் அவதி
Published on

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும், மாநிலங்களில் சட்டசபைகளுக்கும் தேர்தலை தேர்தல் கமிஷன் நடத்துகிறது. தேர்தல் நடத்தவேண்டிய தேதி மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாள் உள்பட கால அட்டவணையை தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்கிறது.

தமிழ்நாட்டில் இப்போது 17-வது சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளது. இந்த வரம்புக்குள்தான் வேட்பாளர்கள் தங்கள் சின்னங்களை வரைவது, பிரசாரம் செய்வது, தொண்டர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது, போக்குவரத்து செலவு உள்பட அனைத்து செலவுகளையும் செய்யவேண்டும்.

வேட்பாளர்கள் இந்த தொகைக்கு மேல் செலவழிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க தேர்தல் நடத்தும் மாநிலங்களை சாராத பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் என்று உயர் அதிகாரிகளின் பட்டாளம் ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொகுதிகளில் பம்பரம் போல சுற்றி வருகிறார்கள். இதேபோல பறக்கும் படையினர்,யாராவது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்கிறார்களா? என்று கண்காணிக்க சோதனை நடத்துகிறார்கள்.

தேர்தல் செலவுக்காக பணம் கொண்டு செல்பவர்களை பிடித்தால் பரவாயில்லை. அதை விட்டுவிட்டு குடும்ப செலவுகளுக்காக, மருத்துவ செலவுகளுக்காக, கல்வி கட்டணம் செலுத்துவதற்காக, வீட்டில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு நகை வாங்க செல்வதற்காக என்று பல்வேறு காரணங்களுக்காக பணம் எடுத்து செல்லும் பொதுமக்களை சோதனை செய்து, அவர்களிடம் இருக்கும் பணத்தை பறிமுதல் செய்துவிடுகிறார்கள். அதுபோல வியாபாரிகளையும் விட்டு வைப்பதில்லை.

நெல்லையில் அப்பள வியாபாரி ஒருவர் கடைகளில் அப்பளம் விற்பனை செய்துவிட்டு, வசூல் செய்த ரூ.50 ஆயிரத்து 600-ஐ கையில் எடுத்து சென்றபோது அவரிடம் இருந்து பறக்கும் படையினர் அவ்வளவு பணத்தையும் பறிமுதல் செய்துவிட்டனர். இதுபோல ஒரு பெண் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரூ.50 கூடுதலாக வைத்து இருந்தார் என்று கூறி அவ்வளவு பணத்தையும் பறிமுதல் செய்துவிட்டனர். உசிலம்பட்டியில் ஒரு தம்பதியினர் ரூ.51 ஆயிரத்து 240 கொண்டுசென்றபோது, பறிமுதல் செய்துள்ளனர். ஒரு நபர் ரூ.50 ஆயிரம் வரை எடுத்து செல்ல அனுமதி இருக்கிறது. அப்படி இருக்கும்போது 2 பேரும் சேர்ந்து வைத்திருத்த பணத்தை பறிமுதல் செய்தது ஏன்? அப்படியே பறிமுதல் செய்தாலும் ரூ.50 ஆயிரம் வரை எடுத்து செல்ல அனுமதி இருக்கிறது.

அதற்கு மேல் இருந்த பணத்தைதானே பறிமுதல் செய்யவேண்டும். இப்படி மொத்த பணத்தையும் பிடுங்கிக்கொள்வது எந்தவகையில் நியாயம்? என்பது மக்களின் ஆதங்கமாக இருக்கிறது. பறக்கும் படையினரின் சோதனை மக்களுக்கு வேதனையாக உள்ளது. ரூ.50 ஆயிரம் உச்ச வரம்பு என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.

இப்போது பணத்தின் மதிப்பு குறைந்துள்ளது. அதேபோல விலைவாசியும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ரூ.50 ஆயிரம் என்ற உச்ச வரம்பை உயர்த்தாமல் இருப்பது சரிதானா? என்று வியாபாரிகள் கேட்கிறார்கள். இப்படி பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உரிய காரணங்களை சொல்லியும், ஆவணங்களை கொடுத்தும் திரும்ப பெறுவதும் எளிது அல்ல. இதை எதிர்த்து வியாபாரிகள் ஆங்காங்கு நடத்தும் போராட்டங்களின் நியாயத்தை தேர்தல் கமிஷன் உணர்ந்து, உடனடியாக உச்ச வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்தவேண்டும் என்ற அவர்கள் கோரிக்கையையும் நிறைவேற்றவேண்டும். அதேபோல மக்களை வதைக்கும் தேவையற்ற கெடுபிடிகளையும் நிறுத்தவேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com