விஸ்வரூபம் எடுக்கப்போகும் மேகதாது விவகாரம்

நாட்டில் உள்ள முதல்-மந்திரிகளிலேயே பணக்காரர் டி.கே.சிவக்குமார்தான்.
விஸ்வரூபம் எடுக்கப்போகும் மேகதாது விவகாரம்
Published on

கர்நாடக துணை முதல்-மந்திரியாக இருந்த டி.கே.சிவக்குமார் தன்னுடைய நீண்ட அரசியல் பயணத்தில் இப்போது சிகரத்தை அடைந்துள்ளார். காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியதால் அம்மாநில முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக டி.கே.சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அவர் கவர்னரை சந்தித்து. அமைச்சரவை அமைக்க தன்னை அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அவரும் ஒப்புதல் வழங்கிவிட்டார். கர்நாடக புதிய முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கும் டி.கே.சிவக்குமார் ஜோதிடத்தில் மிகவும் நம்பிக்கை உள்ளவர். ஜோதிடர்கள் கணித்து கொடுத்ததன் அடிப்படையில், நாளை (3-ந்தேதி) மாலை 4.05 மணிக்கு முதல்-மந்திரியாக அவர் பொறுப்பேற்க உள்ளார். அவரது அமைச்சரவையில் யார், யார் இடம் பெறப்போகிறார்கள்? என்று முடிவு செய்ய டெல்லி சென்றிருக்கிறார்.

64 வயதான டி.கே.சிவக்குமார் எப்போதும் வெள்ளை உடையில் தாடியுடன் இருப்பார். அவருடைய தாடிக்கு ஒரு பின்னணி இருக்கிறது. 2019-ல் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதுவரை அவர் ஒருபோதும் தாடி வைத்தது இல்லை. தினமும் முகச்சவரம் செய்து தாடி இல்லாத முகத்துடனேயே காட்சி தருவார். 50 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு தாடியோடு வெளியே வந்தார். அவர் அப்போது முதல்-மந்திரியாகும் வரை முகத்தில் சவரம் செய்ய 'ரேசர்' பயன்படுத்தப்போவதில்லை என்று சபதம் எடுத்தார். அன்று முதல் தாடியுடனேயே வலம் வரும் டி.கே.சிவக்குமார் எடுத்த சபதத்தை முடித்துவிட்டதால், இனி தாடியை எடுப்பாரா? என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். நமதுநாட்டில் உள்ள முதல்-மந்திரிகளிலேயே பணக்காரர் டி.கே.சிவக்குமார்தான்.

அவருடைய அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.1,140 கோடியாகவும், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.273 கோடியாகவும், கடன் ரூ.265 கோடியாகவும் இருக்கிறது. பணக்கார முதல்-மந்திரி பதவி ஏற்கிறார். எடுத்த சபதத்தை நிறைவேற்றுகிறார். இவ்வளவுக்கும் டி.கே.சிவக்குமார் வீடியோ பார்லர் உரிமையாளராகத்தான் தனது இளமைக்கால வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து கிரானைட் குவாரிகள் மற்றும் கல் குவாரிகளில் தடம் பதித்தார். தொட்ட இடமெல்லாம் செல்வம் கொழித்தது. இந்து கலாசார அடையாளங்களிலும், மத நம்பிக்கை முறைகளிலும் மிகுந்த நம்பிக்கை கொண்ட டி.கே.சிவக்குமார், "முயற்சிகள் தோற்கலாம். ஆனால் பிரார்த்தனைகள் தோற்காது" என்று அடிக்கடி கூறுவார். 23 வயதிலேயே முன்னாள் பிரதமர் தேவே கவுடாவை எதிர்த்து தேர்தலில் களம் கண்டவர். தன்னுடைய 30 வயதில், முன்னாள் கர்நாடக முதல்-மந்திரி பங்காரப்பா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றவர்.

மேகதாது

2022-ல் கொரோனா கட்டுப்பாடுகளையும் மீறி மேகதாதுவுக்கு பாதயாத்திரை சென்றார். இப்போதும் மேகதாது அணை கட்டும் பிரச்சினையில் உறுதியாகவே இருக்கிறார். சில நாட்களுக்கு முன்புகூட. மேகதாதுவில் நிச்சயமாக அணை கட்டியே தீருவோம். தமிழக அரசு என்னவேண்டுமானாலும் செய்யட்டும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முடிவை முன்னெடுத்து செல்வோம். இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என்று முழங்கியிருக்கிறார். ஆக கர்நாடக அரசு, மேகதாது அணை விஷயத்தில் இதுவரை மேற்கொண்டதைவிட இனி எடுக்கப்போகும் நிலைப்பாடுகள் மிக வேகமாக இருக்கும். அதற்காக பாதயாத்திரை நடத்தியவர், இப்போது முதல்-மந்திரியாக ஆகப்போகிறார். இனி இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com