

வணிகர்கள் புது கணக்கை தொடங்கும் நிதி ஆண்டின் முதல் நாளிலேயே நிதி சிக்கலை ஏற்படுத்தும் வகையில் பெரிய அதிர்ச்சியை மத்திய அரசு கொடுத்துள்ளது. கியாஸ் சிலிண்டர்களைப் பொறுத்தவரையில், வீட்டு உபயோகத்திற்காக 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் மானிய விலையிலும், வணிக ரீதியான அதாவது ஓட்டல்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றின் பயன்பாட்டுக்காக 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் மானியம் இல்லாமலும் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்த உடன் பாரசீக வளைகுடாவில் இருந்து ஓமன் வளைகுடா மற்றும் இந்திய பெருங்கடலை இணைக்கும் ஹார்முஸ் நீரிணையின் வழியாக கப்பல்கள் செல்வதற்கு ஈரான் தடை விதித்தது.
இதன் காரணமாக, இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் வினியோக சங்கிலி அறுந்துவிட்டது. கச்சா எண்ணெய் மட்டுமல்லாமல், அது சார்ந்த சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்திலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் இந்தியா ஏற்கனவே இருந்த இருப்பையும், உள்நாட்டு உற்பத்தியையும் வைத்து, வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை சில கட்டுப்பாடுகளுடன் சற்று தடையில்லாமல் வழங்கி வருகிறது.
வணிக ரீதியான சிலிண்டர் வினியோகத்திற்கு முதலில் முழுமையாக தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை மத்திய அரசு சற்று தளர்த்தியுள்ளது. இது ஒருபக்கம் ஆறுதல் என்றாலும், கடந்த 1-ந்தேதி சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2 மாதத்தில் மட்டும், 2 முறை வணிக சிலிண்டர் உயர்வை கண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சிலிண்டர் விலை ரூ.1849.50 ஆக இருந்த நிலையில், மார்ச் 1-ந்தேதி ரூ.144 உயர்ந்து ரூ.1929.50 ஆனது. ஏப்ரல் 1-ந்தேதி ரூ.203 உயர்ந்து இப்போது ரூ.2246.50 ஆக அதிகரித்துவிட்டது. இதனால் ஓட்டல்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தான் பாதிப்பு என்று கவலையின்றி பொதுமக்கள் ஒதுங்கி இருக்கமுடியாது. ஏனெனில், ஓட்டல்களில் உணவு விலையும், டீக்கடைகளில் டீ-காபி விலை மற்றும் வடை, போண்டா போன்ற பண்டங்களின் விலையும், தொழிற்சாலைகளில் உற்பத்தி பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது.
இந்த சுமையை மக்கள் சுமக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை 114.5 சதவீதம் உயர்ந்து விமானத்தைவிடவும் வேகமாக பறந்துவிட்டது. இருந்தாலும் அந்த சுமையை அப்படியே விமான நிறுவனங்களை ஏற்றுக்கொள்ள வைக்காமல், இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 9 சதவீதம் மட்டுமே விலையை உயர்த்தியுள்ளன.
ஆனால் இது உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் விலை இரு மடங்குக்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு தவிர்க்கமுடியாதது என்றாலும், இதனால் விமான கட்டணம் அதிகரித்துவிட்டது.
இந்த கட்டண உயர்வு, பொதுமக்களை விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமா? என்று அண்ணாந்து பார்த்து யோசிக்க வைத்துள்ளது. அதேநேரத்தில், வீட்டு பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை உயரவில்லை என்று திருப்தியடைய முடியாது. தற்போது 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. வருகிற 29-ந்தேதி தேர்தல் முடிந்தவுடன், வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு வந்துவிடுமோ என்று மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.