ஐ.பி.எல். போட்டியில் அசத்திய 15 வயது சூர்யவன்ஷி

2-வது முறையாக பெங்களூரு வெற்றிக்கோப்பையை கையில் ஏந்தியது.
ஐ.பி.எல். போட்டியில் அசத்திய 15 வயது சூர்யவன்ஷி
Published on

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை இருக்கையின் நுனியிலேயே கட்டிப் போட்டது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த இந்த போட்டியை நேரில் எவ்வளவு உற்சாகமாக ஆரவாரத்தோடு பார்த்தார்களோ, அதே உற்சாகம் கிஞ்சிற்றும் குறையாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் காதலர்கள் குறிப்பாக இந்தியர்கள் பார்த்தனர்.

ஐ.பி.எல். போட்டி 2008 முதல் ஆண்டுதோறும் நடக்கிறது. இந்த ஆண்டு கடந்த மார்ச் 28-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி லீக் முறையில் நடைபெற்றது. அதாவது ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்கள் ஆடின. 13 நகரங்களில் இந்த போட்டிகள் அரங்கேறின.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 7 போட்டிகள் தமிழக ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தது. 'தல' டோனி விளையாடவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும், இந்த ஆட்டங்களுக்கு மவுசு குறையவே இல்லை.

இறுதி போட்டியில் கடந்த ஆண்டு மகுடம் சூடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மல்லுக்கட்டின. இந்த போட்டியை தங்களுக்கு பிடித்தமான வீரர்களின் பெயர்களைக் கொண்ட ஜெர்சி அணிந்து டெலிவிஷனில் பார்த்த குறிப்பாக வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், அதை சமூக வலைத்தளங்களிலும் உற்சாகமாக பதிவுசெய்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிதான் வெற்றி பெறும் என்ற உணர்வு ரசிகர்களுக்கு மேலோங்கிவிட்டது.

ஏனென்றால் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலக்கை துரத்தி பிடிப்பதில் வல்லவரான விராட் கோலியின் பிரமாதமான பேட்டிங்கால் பெங்களூரு அணி எளிதில் வெற்றியை ருசித்தது.

2 ஓவர்களை மீதம் வைத்து, 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை குவித்து 'ரிப்பீட்டு' என்று எல்லோரும் ஆர்ப்பரிக்கும் அளவுக்கு தொடர்ந்து 2-வது முறையாக பெங்களூரு வெற்றிக்கோப்பையை கையில் ஏந்தியது. வழக்கம்போல இந்த தொடரிலும் ரன்களுக்கு பஞ்சமேயில்லாமல் மொத்தம் 1,426 சிக்சர்களும், 2,332 பவுண்டரிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

சூர்யவன்ஷி

பெங்களூரு அணி வெற்றி பெற்றாலும், இந்த தொடரின் கதாநாயகன் ராஜஸ்தான் அணியின் 15 வயதான சூர்யவன்ஷிதான். பொதுவாக 14, 15 வயதில்தான் கிரிக்கெட் பற்றிய புரிதலே பலருக்கும் வரும். ஆனால் பீகாரை சேர்ந்த சூர்யவன்ஷி கடந்த ஆண்டு தனது 14 வயதிலேயே ஐ.பி.எல். போட்டியில் நுழைந்து கிரிக்கெட் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதுமட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த குறைந்த வயதான வீரரும் இவர்தான். இந்த சீசனில் 72 சிக்சர் அடித்து இவருக்கு நிகர் யாரும் இல்லை என்று நிரூபித்துவிட்டார். இதுமட்டுமல்லாமல் அதிக ரன் குவிப்பு, அதிக சிக்சர், மதிப்புமிக்க வீரர், வளர்ந்து வரும் வீரர், சூப்பர் ஸ்டிரைக்கர் என்றவகையில் 5 விருதுகளையும் பெற்று அசத்தினார். மெய்சிலிர்க்க வைக்கும் அவரது அபார ஆட்டத்தால் இந்திய அணியில் தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது. அவரது வெற்றிக்கு காரணமே பந்தை சிக்சருக்கு விரட்டும் அவரது அசுர பலம்தான். மொத்தத்தில் இந்தியாவுக்கு பாலகனான சூர்யவன்ஷி ஒரு பொக்கிஷமாக திகழ்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com