

தமிழ்நாடு வந்தாரை வாழவைக்கும் புண்ணிய பூமி. தன்னை நாடியவர்களை தமிழ்நாடு ஒருபோதும் ஆதரவுக்கரம் நீட்டி அரவணைக்க தவறியது இல்லை. அந்தவகையில், பனியன் தொழில் நகரமான திருப்பூரில் இருக்கும் வேலைவாய்ப்புகளை பூர்த்தி செய்ய தமிழ்நாட்டில் இளைஞர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.
இதனால், வட மாநிலங்களில் இருந்து ஆண்களும், பெண்களும் அலை அலையாய் அங்கு வருகிறார்கள். விடுமுறை நாட்களில் திருப்பூரின் கடை வீதிகளை பார்த்தால் இது தமிழ்நாடா? வட மாநிலமா? என்று வேறுபடுத்தி பார்க்கமுடியாத அளவுக்கு கட்டுக்கடங்காத வட இந்தியர்களின் கூட்டம் காணப்படும். திருப்பூரில் மட்டும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்றுவருகிறார்கள். திருப்பூரில் தயாராகும் பனியன் மற்றும் ஆடைகள் உள்நாட்டுக்கு மட்டுமின்றி, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன், பஹ்ரைன், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
திருப்பூரில் இருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி மூலம் வர்த்தகம் நடந்து வந்தது. ரஷியா-உக்ரைன் போர் தொடங்கியது முதல் இந்த தொழிலின் ஏற்றுமதியில் சற்று தொய்வு ஏற்பட்டது. அது இப்போது பெரும் பள்ளத்தை சந்தித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை தொடர்ந்து பின்னலாடை ஏற்றுமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ஹார்முஸ் நீரிணையை கப்பல்கள் கடக்க விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து கியாஸ் மற்றும் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழிலும் அவிழ்க்கமுடியாத முடிச்சு போல பின்னி கிடக்கிறது.
பெட்ரோலிய பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பின்னலாடை தொழிலுக்கான மூலப்பொருட்களின் விலை 20 முதல் 25 சதவீதம் உயர்ந்துவிட்டது. வர்த்தக கியாஸ் சிலிண்டர்களும் கிடைப்பதில்லை. இந்த நேரத்தில் வர்த்தக கியாஸ் சிலிண்டரின் விலை ஏப்ரல் 1-ந்தேதி ரூ.203 உயர்ந்து ரூ.2,246 ஆகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் வர்த்தக கியாஸ் சிலிண்டருக்கு இதுபோல விலை உயர்ந்தது இல்லை.
இந்த தொழிலில் சாயப்பட்டறைகளுக்கு கியாஸ் சிலிண்டர்களின் தேவை மிக அதிகமாக உள்ளது. இப்போது சிலிண்டர் கிடைக்காததால் அந்த தொழிலில் விறகு அடுப்பை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். விறகு விலையும் டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்துவிட்டது.
இதுமட்டுமல்லாமல் பாலிஸ்டர் நூல், சாய ஆலைகளுக்கு பயன்படுத்தும் ரசாயன பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக ஆயத்த ஆடைகளின் தயாரிப்பில் அடக்க விலை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த விலையில் நிச்சயமாக மற்ற நாடுகளோடு போட்டிப்போட முடியாது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால் சாப்பிடுவதற்கு உணவு தயாரிக்க முடியாமல் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர்.
இதனால் தொழிலாளர் பற்றாக்குறை, மூலப்பொருட்கள் விலை உயர்வு, வாங்க ஆட்கள் வராததால் கோடிக்கணக்கான மதிப்பிலான பின்னலாடைகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் முடங்கி கிடக்கின்றன. நாள் ஒன்றுக்கு இந்த துறை ரூ.100 கோடி வரை நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் பின்னலாடை தொழில் இருண்ட காலத்தை சந்திக்கவேண்டிய சூழல் ஏற்படும். எனவே மத்திய அரசு இதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.