உலகக்கோப்பை கால்பந்தில் இந்தியா கால் பதிப்பது எப்போது?

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்று நள்ளிரவில் மெக்சிகோவில் தொடங்குகிறது.
உலகக்கோப்பை கால்பந்தில் இந்தியா கால் பதிப்பது எப்போது?
Published on

உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்று நள்ளிரவில் மெக்சிகோவில் தொடங்குகிறது. உலகில் அதிக நாடுகளில் விளையாடப்படும் போட்டி, அதிக ரசிகர்களை கொண்ட போட்டி எது என்றால் அது கால்பந்துதான். இந்தியாவிலும், உலக கால்பந்து போட்டியைக்காண கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இத்தனைக்கும் இதுவரை இந்திய கால்பந்து அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் களம் கண்டது கிடையாது. ஒவ்வொரு முறையும் ஆசிய மண்டல தகுதி சுற்றோடு நமது சவால் முடிந்துவிடும். அதற்கு மேல் முன்னேறியதில்லை. என்றாலும் கால்பந்து போட்டியைக் காண இந்திய மக்களுக்கு எப்போதும் அதீத ஆர்வம் உண்டு.

1958, 1962, 1966, 1970-ல் நடந்த உலக கால்பந்தில் பிரேசில் நாட்டு ஜாம்பவான் பீலேவின் வியப்பூட்டும் ஆட்டத்தை இன்றும் புளகாங்கிதத்தோடு பேசும் பல மூத்த குடிமக்கள் இருக்கிறார்கள். பிரேசில் நட்சத்திரம் ரொனால்டோவின் கால்கள் காட்டிய வித்தையை ரசித்தவர்கள் ஏராளம். உலகக் கோப்பையில் 6-வது முறையாக விளையாடப்போகும் அர்ஜென்டினா சூப்பர் ஸ்டார் லயோனல் மெஸ்சிக்கு கொல்கத்தாவில் 70 அடி உயர சிலை அமைத்து கொண்டாடி மகிழ்வது இந்தியாவில் தான். இப்படி கால்பந்து மீது தணியாத காதல் கொண்ட ரசிகர்கள் குறிப்பாக தென்மாநிலங்களான கேரளா மற்றும் தமிழ்நாட்டில் குக்கிராமங்களில் கூட அதிகமாக இருக்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற்றதில்லை என்ற ஒரு பெரிய மனக்குறை இருக்கிறது. கிரிக்கெட் உள்பட அனைத்து விளையாட்டுகளின் பெரிய போட்டிகள் இந்தியாவில் நடக்கிறது. உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடக்காததற்கு காரணம், மிகப்பெரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது மட்டுமின்றி, போட்டிக்கு பணத்தை தண்ணீராக செலவழிக்க வேண்டியது அவசியமாகும். அத்துடன் உரிமம் பெற பல நாடுகளின் ஆதரவு தேவை. உலகத்தரத்துடன் ஒப்பிடும்போது இந்திய கால்பந்தின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. அதனால்தான் உலக கால்பந்து போட்டியை நடத்தும் முயற்சியை எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஒரு வேளை நாம் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தினால், போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் கலந்துகொள்ளும் அதிர்ஷ்டம் கிட்டும். அந்த வாய்ப்பும் தற்போதைக்கு கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இருப்பதாக தெரியவில்லை.

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 1930-ல் இருந்து 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2022-ல் கத்தாரில் நடந்தது. இதுவரை 18 நாடுகள் உலகக்கோப்பைக்கான போட்டியை நடத்தி இருக்கின்றன. இந்த ஆண்டு நடக்க இருக்கும் போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த நாடுகளில் உள்ள 16 நகரங்களில் நடக்கும் இப்போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 104 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு, அதிகாலை நேரங்களில்தான் டெலிவிஷனில் இந்த போட்டிகளை நாம் காண முடியும். ஆக இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு இன்று முதல் 39 நாட்களுக்கு தூங்கா இரவாகத்தான் இருக்கப்போகிறது. என்னதான் இந்த போட்டி அனைவரையும் வெகுவாக கவர்ந்தாலும் இந்திய அணி ஒரு முறை கூட இதில் கால் பதிக்கவில்லையே என்ற ' ஏக்கம் மட்டும் கால்பந்து ஆர்வலர்களை விட்டு அகலப்போவதில்லை. அந்த குறையை போக்க திறமை வாய்ந்த கால்பந்து வீரர்களை உருவாக்க தேவையான பயிற்சிகளை அளிப்பதிலும், நவீன வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த கால்பந்து மைதானத்தை உருவாக்குவதிலும் மத்திய அரசாங்கம் அதிக முனைப்பு காட்டவேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com