பிரதமர் மோடியின் சாதனை மகுடத்தில் மற்றொரு வைரக்கல்

நெடுஞ்சாண் கிடையாக வணங்கிய பிறகே நாடாளுமன்றத்தின் உள்ளே பிரதமர் மோடி அடியெடுத்து வைத்தார்.
பிரதமர் மோடியின் சாதனை மகுடத்தில் மற்றொரு வைரக்கல்
Published on

காந்தி பிறந்த மண்ணில் அவதரித்த பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் உலகில் பல வரலாறுகளை படைத்து வருகிறார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அவர் தலைமையிலான பா.ஜனதா தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்று அரியணை ஏறியது. முதல் முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்தபோதே அவர் பிரதமராகத்தான் சென்றார் என்பது வரலாற்று பக்கங்களில் மற்றொரு அத்தியாயம்.

நெடுஞ்சாண் கிடையாக வணங்கிய பிறகே நாடாளுமன்றத்தின் உள்ளே பிரதமர் மோடி அடியெடுத்து வைத்தார். அவர் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்குள் நுழைந்த நேரத்தில் பா.ஜனதா மாபெரும் வெற்றியை பெற வழிநடத்தியதற்காக புகழ் மழை பொழியப்பட்டுக்கொண்டு இருந்தது.

அப்போது மிகவும் தழுதழுத்த குரலில், பா.ஜனதாவை ஒரு தாய் போலத்தான் நினைக்கிறேன். ஒரு மகன் தன் தாய்க்கு தொண்டாற்றுகிறான் என்று உணர்ச்சி பொங்க பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அந்த தேர்தல் முடிவு பா.ஜனதா மீதான நம்பிக்கையைத்தான் பறை சாற்றுகிறது என்றார். தேர்தலில் மட்டுமல்லாமல், அவருடைய சீரிய தலைமையில் பா.ஜனதா அடுத்து நடந்த 2019, 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் மகத்தான வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. 5 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா ஆட்சியும், 2 மாநிலங்களில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியும் இருந்தது.

இந்த நிலையில் இருந்து இப்போது 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் பா.ஜனதாவும், அதன் கூட்டணி அரசுகளும் ஆட்சியில் உள்ளன. பா.ஜனதாவுக்கு எட்டாக் கனியாக இருந்த ஒடிசாவிலும், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேச மாநிலங்களிலும் பா.ஜனதா கொடியை பட்டொளி வீசி பறக்க செய்தது நரேந்திர மோடியின் திட்டமிடுதலும், முயற்சியும்தான் என்றால் அது மிகையாகாது.

அவரது அரசியல் சாணக்கியத்தனத்தால்தான் இப்போது மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் காலம் வாசலை தட்டிக்கொண்டு இருக்கிறது. அதுபோல மாநிலங்களவையிலும் பா.ஜனதா உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. அவர் பிரதமர் பொறுப்பையேற்று 12 ஆண்டுகள் ஆகிய நிலையில் அரசியல் இலக்கணத்தையே மாற்றி எழுதிவருகிறார். அவரது புகழ் மகுடத்தில் மற்றொரு ஒளிவீசும் வைரக்கல் கடந்த புதன்கிழமை பதிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவிலேயே அதிக காலம் பிரதமராக இருந்தவர் என்ற புதிய வரலாற்றை கடந்த 10-ந் தேதி நிகழ்த்தி காட்டியிருக்கிறார். இதுவரை அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் ஜவகர்லால் நேருதான் என்று வரலாற்று பக்கங்களில் பொறிக்கப்பட்டு இருந்தது.

1947-ல் பிரதமரான அவர் 1951-52-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 1964-ல் மறையும் வரையிலும் பிரதமராக 4,398 நாட்கள் இருந்தவர் என்ற பெயரைப் பெற்று இருந்தார். இந்திரா காந்தி 4,077 நாட்கள் பிரதமராக இருந்திருக்கிறார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, நேருவின் சாதனையை முறியடித்து 4,399 நாட்களாக பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற முத்திரையை பதித்துவிட்டு, பிரதமர் பதவியை தொடர்ந்து அலங்கரித்து வருகிறார். இந்த 4,399 நாட்களிலும் அவர் இந்தியாவை திறம்பட வழிநடத்தி, உலக அரங்கில் முன்னேற்ற பாதையில் கொண்டுச்சென்றிருக்கிறார். கொரோனா பேரழிவில் இருந்து நாட்டை மீட்டு, வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்து செல்கிறார். ஒரு பக்கம் பா.ஜனதா கட்சியையும் வளர்த்து, மற்றொரு பக்கம் பா.ஜனதா அரசையும் திறமையாக நடத்தி செல்லும் சாதனை பெரிதிலும் பெரிது.

X

Daily Thanthi
www.dailythanthi.com