

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மலையும் ஒன்றாகும். புதுமணத் தம்பதிகளின் சொர்க்கபுரியாக, அதாவது தேனிலவுக்கான முதல் தேர்வாகக் கருதப்படுவது நீலகிரி மலையில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி போன்ற இடங்கள்தான். அதிலும் நீலகிரி மலையில் ரெயிலிலும், மோட்டார் வாகனங்களிலும் பயணம் செய்யும் அனுபவமே தனி சுகம்தான். எங்கு பார்த்தாலும் ஓங்கி உயர்ந்த மரங்கள், சூரியனின் கதிர்கள் பூமியை தொடமுடியாத அளவுக்கு பசுமைக் காடுகள்.
ஆங்காங்கே மலையில் இருந்து ஓடிவரும் நீரோடைகள் என்று இருபுறமும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ரம்மியமான காட்சிகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படிப்பட்ட நீலகிரி மலைக்கு இப்போது சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். பருவமழையால் ஏற்படும் நிலச்சரிவுகள்தான் இதற்கு காரணம். ஒரு பக்கம் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கும் கனமழை, மறுபக்கம் சாலையில் விழுந்து கிடக்கும் மரங்கள். எப்போது ஏற்படுமோ என்று அச்சம் கொள்ள வைக்கும் மண்சரிவுகள் என்று நீலகிரி மலை யாரும் போகமுடியாத மலையாகிவிட்டது.
கடந்த வாரம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், நீலகிரி, கோவை மாவட்ட எல்லையான பர்லியார் மலைப்பகுதியில் சென்றுக்கொண்டிருந்த அரசு பஸ் மீது ராட்சத மரமும். மண்ணும், சேறும் விழுந்து அமுக்கியது. இதில், பஸ் டிரைவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார். கடந்த 3 நாட்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் 88 மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
சாலையில் செல்வதே ஆபத்து என்ற நிலையில் பசுமை போர்வையை போர்த்திய நீலகிரி மலை தத்தளிக்கிறது. மண் சரிவு மட்டுமல்லாமல், மலையின் மேலிருந்து ராட்சத பாறைகளும் உருண்டு விழுந்து வருகின்றன. ஏராளமான குடிசைகள், வீடுகள். மின்கம்பங்கள், மின்மாற்றி என்று சேதப்பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. மலை ரெயில் சேவையும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்யும் கனமழை, மலைச்சரிவுகளை வெட்டி சாலைகள் அமைத்திருப்பது. கட்டுமான பணிகளும் நிலப்பயன்பாட்டு மாற்றங்கள், நீண்டகால வானிலை சிதைவால் பாறைகள் பலவீனமடைந்தது. மண் அரிப்புகள், வடிகால் குறைபாடுகள், மண், நிலச்சரிவுகளுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
நிலச்சரிவு என்பது நீலகிரி மாவட்டத்துக்கு புதிதல்ல. 1824-ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய நிலச்சரிவு காரணமாகத்தான் அங்குள்ள அவலாஞ்சிக்கு அந்தப் பெயர் உருவானதாக வரலாற்று தகவல்கள் உள்ளன. 1978-ல் பெய்த கனமழையால் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து 1993, 2009, 2019-ம் ஆண்டுகளிலும் பெருமழையின்போது நிறைய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. 1973-ம் ஆண்டு முதல் இப்போது வரை 500-க்கும் மேற்பட்ட மண்சரிவுகளையும், நிலச்சரிவுகளையும் நீலகிரி சந்தித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள மண்சரிவுகளுக்கான காரணங்களையும், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளையும் பற்றி புவியியல் ஆய்வு நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். நிலச்சரிவை தடுக்கமுடியாவிட்டாலும், அதை தவிர்க்கவும். குறைக்கவும் இந்த ஆய்வுகள் துணையாக இருக்கும் என்பதால், இதற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மலைச்சரிவுகளில் கட்டுமானங்கள், சாலை விரிவாக்கப் பணிகள் அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்கப்படவேண்டும்.
காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கவும், நிலச்சரிவு அபாய வரைபடங்களை புதுப்பிக்கவும் வேண்டும். அதேபோல நீலகிரியின் எச்சரிக்கையை தற்காலிக பேரிடராக கருதி மறந்துவிடாமல், எதிர்கால திட்டமிடலுக்கான பாடமாக அரசும், மக்களும் எடுத்துக்கொள்ளவேண்டும்.