டெங்கு காய்ச்சலுக்கும் தடுப்பூசி

நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்துக்கு டெங்கு தடுப்பூசியை அமைச்சர் அருண்ராஜ் வரவழைத்துள்ளார்.
டெங்கு காய்ச்சலுக்கும் தடுப்பூசி
Published on: 

சென்னை,

மழைக்காலம் தொடங்கியுள்ளதையொட்டி தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி, எலும்பு வலி போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த நோயால் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும்போது, நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும், பல் ஈறுகள், சிறுநீர்ப் பாதை ஆகியவற்றிலும் ரத்தக்கசிவு ஏற்படக்கூடும். உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காவிட்டால் உயிரிழப்புகள்கூட நேரிடலாம்.

மனிதர்களின் ரத்தத்தை துளை போட்டு உறிஞ்சும் ரத்தக் காட்டேரியான ஏடிஸ் வகை கொசுக்களால்தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஏடிஸ் கொசுக்கள் பட்டப்பகலிலேயே மனிதர்களை கடிக்கும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடித்த ஏடிஸ் கொசு, மற்றவர்களை கடிக்கும்போது அவர்களுக்கும் நோய் பரவுகிறது. காய்ச்சல் ஏற்பட்டவர்கள் உடனடியாக டாக்டரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்து, உரிய மருத்துவ சிகிச்சை பெறவேண்டும்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்பேரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவர் ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் என்றாலும், மருத்துவ படிப்புகளையும் படித்தவர். "நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி, வாய்ப்பச் செயல்" என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்குக்கு, கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள உரையின்படி, நோய் என்னவென்று ஆராய்ந்து, அதன் மூலத்தையும் அறிந்து, நோயைத் தீர்க்கும் வழிமுறைகளையும் தெளிந்து, அவற்றைப் பிழையின்றிச் செயல்படுத்தவேண்டும். இதற்கேற்ப, அமைச்சராக மட்டுமல்லாமல், மருத்துவராகவும் இருந்து அருண்ராஜ் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

இந்தியாவில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி பயன்பாட்டில் இல்லை. ஆனால், ஜப்பானை சேர்ந்த டகேடா மருந்து நிறுவனம் தனது ஜெர்மனி ஆலையில் கியூடெங்கா என்ற தடுப்பூசியை தயாரிக்கிறது. உலக அளவில் இந்த தடுப்பூசிக்கு 40 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. உலக சுகாதார நிறுவனம் இந்த தடுப்பூசிக்கு முன்தகுதி சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்தியாவிலும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, 4 முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படாத நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்துக்கு இந்த தடுப்பூசியை அமைச்சர் அருண்ராஜ் வரவழைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்த தடுப்பூசியை முன்னோடி திட்டமாக செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மூன்று மாத இடைவெளியில் இந்த தடுப்பூசியை இரண்டு தவணைகளை செலுத்தவேண்டும். அவ்வாறு செலுத்தினால், 80 சதவீதம் வரை டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார் அமைச்சர் அருண்ராஜ்.

கடையநல்லூரில் செலுத்தப்படும் இந்த தடுப்பூசியின் விளைவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வின் முடிவுகள் நாடு முழுவதற்கும் வழிகாட்டியாக அமையும். கடையநல்லூரில் டெங்கு தடுப்பூசியின் விளைவுகள் குறித்து அதிகாரிகள் அளிக்கும் அறிக்கை கிடைத்த பிறகு, மக்கள் நல்வாழ்வுத்துறை அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு செலுத்த உள்ளது. இதன்மூலம், விரைவில் டெங்கு காய்ச்சல் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நிலையை தமிழக அரசு எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com