லஞ்ச ஊழலுக்கு கதவைச் சாத்துகிறது டிஜிட்டல்

லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
லஞ்ச ஊழலுக்கு கதவைச் சாத்துகிறது டிஜிட்டல்
Published on: 

அந்தக் காலகட்டங்களில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான பாஸ்போர்ட் வாங்க வேண்டுமென்றால் பல ஊழல் பாதைகளைத் தாண்டித்தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பாஸ்போர்ட் பெறுவதை கடந்த 2010-ம் ஆண்டு டிஜிட்டல் மயமாக்கினார். அதனால், ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் தொடங்கி, பாஸ்போர்ட் கையில் வரும் வரை வீட்டில் இருந்தபடியே செய்து முடிக்க முடிகிறது.

டிஜிட்டல் தொழில்நுட்பம்

இதனால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே இருந்த தேவையற்ற நேரடித் தொடர்பு குறைந்து, லஞ்சத்துக்கு வழிவகுத்த கதவுகளும் அடைக்கப்பட்டன. இதுதான் டிஜிட்டல் நிர்வாகத்தின் மிகப்பெரிய பலன். ஒரு சேவையை எளிதாக்குவது மட்டுமல்ல, அந்தச் சேவையைப் பெறுவதற்காக ஒருவர் இன்னொருவரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இல்லாமல் செய்வதுதான் அதன் நோக்கம். லஞ்சம் கொடுப்பவரையும், வாங்குபவரையும் உருவாக்கும் வாய்ப்புகளையே அரசு நடைமுறைகளில் இருந்து அகற்றுவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.

முதல்-அமைச்சர் விஜய்

அந்த நோக்கத்துடன்தான், ஆட்சிக்கு வந்தவுடனேயே மக்கள் பணிக்கு ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கக்கூடாது என்றும், யாராவது லஞ்சம் கேட்டால் "கொடுக்க முடியாது” என்று தைரியமாகச் சொல்லுங்கள், நான் உங்கள் பின்னால் நிற்கிறேன் என்றும் முதல்-அமைச்சர் விஜய் கூறினார். அதன்படியே லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் லஞ்சத்தை ஒழிப்பதற்கு சோதனைகளும். தண்டனைகளும் மட்டும் போதாது. லஞ்சம் கேட்கக்கூடிய சூழலையே உருவாக்காமல் இருப்பதுதான் நிரந்தரத் தீர்வு. அதற்கு டிஜிட்டல் நிர்வாகமே வலிமையான ஆயுதம். அதன்படி லஞ்சம் அதிகமாக நடமாடுவதற்கு வாய்ப்பு உள்ள போக்குவரத்து அலுவலகங்களிலும், பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளன.

கட்டணம் இல்லாமல்

போக்குவரத்து அலுவலகங்களில் சமீபத்தில் டிரைவிங் லைசன்சு மற்றும் பதிவு சான்றிதழ் என்று சொல்லப்படும் ஆர்.சி. புத்தகங்களை தபாலில் விண்ணப்பதாரருக்கு அனுப்பும் முறை நிறுத்தப்பட்டு விட்டது. எந்த விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகவே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விட முடியும். பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த டிரைவிங் லைசன்சையும், ஆர்.சி. புத்தகத்தையும் டிஜிலாக்கரிலும் பதிவு செய்து விட்டால் எந்த இடத்துக்கும் அந்த ஆவணங்களை கையில் எடுத்துக்கொண்டு செல்லவும் வேண்டாம்.

முக்கியமான புரட்சி

சோதனை செய்ய வரும் அதிகாரிகளிடம் டிஜிலாக்கர் மூலம் காட்டினால் போதும். அடுத்து, பத்திரப்பதிவுத் துறையிலும் ஒரு முக்கியமான புரட்சி நடைமுறைக்கு வந்துவிட்டது. சொத்து அடமானம் காட்டி வங்கிகளில் வீட்டு கடன், சொத்து அடமானக் கடன் மற்றும் தொழில் கடன்கள் வாங்கும் முறையில் ஒரு பெரிய மாற்றமே வந்துவிட்டது. இனி இந்த சொத்து அடமானத்துக்காக பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு செல்ல வேண்டியதும் இல்லை. யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதுமில்லாமல் நேரடியாக செல்ல வேண்டிய நடைமுறைக்கு ஒரு மூடு விழா நடத்தப்பட்டுள்ளது.

நல்ல தொடக்கம்

கடன் கொடுக்கும் வங்கிகளே இந்த ஆவணங்களை பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி ஒப்புதலையும் பெற்று விடும். ஏற்கனவே தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் பத்திரப்பதிவு தலைவராக இருந்தபோது வித்திட்ட இந்த நடைமுறை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த இரு அலுவலகங்களிலும் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்க கூடாது என்பதற்காக அரசின் இந்த டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை ஒரு நல்ல தொடக்கமாக தமிழ்நாட்டில் அமைந்துவிட்டது. இனி சில நாட்களில் இது அனைவருக்கும் பழக்கமான ஒன்றாகிவிடும்.

X