

தமிழகத்தின் 17-வது சட்டசபை தேர்தல் பல காட்சிகளை அரங்கேற்றியிருக்கிறது. தி.மு.க. அ.தி.மு.க. கூட்டணிக்கு போட்டியாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் களம் இறங்கியது. கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளிலேயே கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாத நிலையிலேயே மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு 108-ல் வெற்றி பெற்று நான்தான் தனிப்பெரும் கட்சி என்று விஜய் நிரூபித்துவிட்டார். தி.மு.க.-அ.தி.மு.க. கட்சிகளை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் இருந்தாலும் அவருக்கு ஆட்சி அமைக்க தேவையான மேஜிக் நம்பர் 118 தொகுதிகளில் வெற்றி இல்லாததால் உடனடியாக அவரை ஆட்சி அமைக்க கவர்னரால் அழைக்க முடியவில்லை.
ஆட்சியமைப்பதற்கு தேவையான மேலும் 11 இடங்களை பெறுவதற்காக தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுக்காக த.வெ.க. வலை வீசியது. இதில் எந்த மீனும் சிக்காத நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற தூண்டில் தி.மு.க.வின் தோழமை கட்சியான காங்கிரஸ் கட்சியை த.வெ.க. பக்கம் ஈர்த்துவிட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்களும் த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கி புதிய உறவை மலர செய்தனர். ஆக தமிழக வெற்றிக்கழகத்துடன் கைகோர்க்கும் முதல் அரசியல் கட்சி காங்கிரஸ் என்ற முத்திரையை பதித்துள்ளனர். ஒரு பக்கம் புதிய உறவு என்றாலும், மறுபக்கம் மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டிய கட்சியுடனான 60 ஆண்டு கால உறவு மலரை காங்கிரசார் கருக செய்துவிட்டனர். இது அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதை பிரதிபலிக்கிறது.
இதை தி.மு.க கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்த உறவு வெறும் கட்சிகளுக்கான அரசியல் உறவாக மட்டும் இருந்ததில்லை. அதையும் தாண்டி இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கும் கலைஞர் கருணாநிதி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையேயான அசைக்கமுடியாத பாசப்பிணைப்பாகவும் இருந்தது. தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்தே அதாவது 1949-ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் எதிர்ப்பு உணர்விலேயே இருந்தது, வளரவும் செய்தது. 1967-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஆட்சி கட்டிலில் இருந்த காங்கிரசை தி.மு.க. தோற்கடித்தது. அப்போது முதல் இன்றுவரை காங்கிரசால் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமரமுடியாத நிலை இருக்கிறது.
ஏறத்தாழ 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஒருமுறையும், ஜெயலலிதா ஆட்சியில் ஒருமுறையும் என இருமுறை மட்டுமே தங்கள் அணியை மாற்றியதே தவிர மற்ற தேர்தல்கள் அனைத்திலும் தி.மு.க.வுடனேயே கரம் கோர்த்து பயணித்தது. இதில் காங்கிரஸ்-தி.மு.க. உறவு 2019 நாடாளுமன்ற தேர்தலில்தான் உச்சத்தை அடைந்தது. அப்போது இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். 'இந்தியா' கூட்டணியில் ராகுல்காந்தி தலைமை பொறுப்பில் இருக்கக்கூடாது என்று மம்தா பானர்ஜி உள்பட பல தலைவர்கள் போர்க்கொடி தூக்கிய நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தது மு.க.ஸ்டாலின்தான். காங்கிரசுடன் ஏற்பட்டுள்ள உறவின் விரிசல் தலைவர்களின் நட்பிலும் எதிரொலிக்குமா? 'இந்தியா' கூட்டணி உறவிலும் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகளும் தி.மு.க.வுடன் ஒட்டுதலோடு இருக்குமா? அல்லது காங்கிரசைப்போல, விலகி செல்லுமா? என்பதற்கு இன்றோ அல்லது நாளையோ விடை கிடைத்துவிடும்.