

நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய தினம் நிதி மந்திரி பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வது மரபாகும். அந்தவகையில், இந்த ஆண்டும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இது மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறையால் தயாரிக்கப்பட்ட விரிவான ஆய்வறிக்கையாகும். பொருளாதார ரீதியாக கடந்த ஆண்டின் நிலைமையையும், நிகழப்போகும் நிலைமைகளையும் படம் பிடித்துக்காட்டும் காலக்கண்ணாடியாகும் இது.
இந்த அறிக்கையில் கடந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, வளர்ச்சி விகிதம், நிதிப்பற்றாக்குறை, வேலைவாய்ப்பு நிலை உள்பட நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிகள், வீழ்ச்சிகள் மட்டுமல்லாமல் நடப்பு நிதி ஆண்டில் நாடு எந்த திசையில் செல்லும்? என்பதும் விரிவாக அலசி ஆராயப்பட்டு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று கடந்த நிதி ஆண்டின் பொருளாதார அறிக்கை மதிப்பிட்டு இருந்த நிலையில், அந்த இலக்கை எட்டமுடியாமல் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதம்தான் இருந்தது.
வரும் நிதி ஆண்டில், அதாவது 2025-26-ல் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் அதேவேளையில், 'இந்தியாவை 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவாக மாற்றிக்காட்டுவேன்' என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துக்கொண்டு மூச்சுக்கு மூச்சு பேசிக்கொண்டு இருக்கும் நிலையை அடையவேண்டும் என்றால் இந்த வளர்ச்சி நிச்சயமாக போதாது. குறைந்தது 10 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக 8 சதவீத வளர்ச்சி அடையவேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையை அடையவேண்டுமென்றால் தற்போது அடைந்து இருக்கும் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி அதாவது ஜி.டி.பி. 31 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தப்படவேண்டும் என்றே தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த வளர்ச்சிகளையெல்லாம் அடைய தொழில்துறையில் கட்டுப்பாடுகளையெல்லாம் தளர்த்தவேண்டும், உள்நாட்டு திறனை அதிகப்படுத்தவேண்டும், நாட்டை கட்டமைக்க தனியார் பங்களிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், இந்திய நடைமுறைக்கு ஏற்றவகையில் எரி சக்திகள் உள்பட பல்வேறு ஆற்றல்களில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்பதையே முக்கியமான 4 முன்னெடுப்புகளாக கூறப்பட்டுள்ளது. தொழில்துறையில் பணியாளர்கள் வேலை செய்யும் நேரத்திலும் ஒரு தளர்வு வேண்டும். பெண்கள் பல்வேறு பணிகளில் வேலை பார்ப்பதற்கு இருக்கும் கட்டுப்பாடுகளையெல்லாம் தளர்த்தி எளிதாக்க வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய ஆய்வறிக்கை 53 சதவீத பட்டதாரிகளும், 36 சதவீத முதுகலை பட்டதாரிகளும் தங்களின் படிப்புக்கேற்ற வேலையை பார்க்கவில்லை என்ற கவலை தரும் செய்தியை தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில்தான் இருக்கவேண்டுமே தவிர, வேலைவாய்ப்புகளுக்கு மாற்றாக இருக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளது. பொது போக்குவரத்தின் பயன்பாடு நகர்ப்புறங்களில் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். இந்தியாவின் மொத்த தோல்பொருள் உற்பத்தியில் 38 சதவீதமும், ஏற்றுமதியில் 47 சதவீதமும் தமிழகத்தின் பங்களிப்பு இருக்கிறது என்றும், தமிழக அரசின் இல்லம் தேடிக்கல்வி திட்டத்தால் மாணவர்களின் கற்றல் ஆர்வம் அதிகரித்து இருக்கிறது என்றும் ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது. எதிர்காலத்துக்கு விவசாயத்துறையே வெகுவாக பங்களிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த ஆய்வறிக்கை நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் அறிவுரை அறிக்கையாக இருக்கிறது.