குறைவான நாட்கள் நடந்த சட்டசபை கூட்டம்

மக்கள் நலன்சார்ந்த கொள்கை ரீதியிலான பல்வேறு முக்கிய முடிவுகள் சட்டசபையில்தான் எடுக்கப்படுகின்றன.
குறைவான நாட்கள் நடந்த சட்டசபை கூட்டம்
Published on

மனித உழைப்பை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு பணிக்கும் வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் வாரத்துக்கு எத்தனை நாட்கள் வேலை பார்க்கவேண்டும்?, ஆண்டுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆக அனைத்து பணிகளிலும் குறிப்பிடப்பட்ட அந்த நாட்களில் வேலை பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விவாதிக்கவும், அதற்கு தீர்வு காணவும் ஏற்ற இடமாக கருதப்படுவதுதான் ஜனநாயகம் ஒளி வீசும் மாட்சிமைமிக்க சட்டசபை. வருவாய் மற்றும் செலவுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால்தான் அரசு தனது துறைகளுக்கு நிதி ஒதுக்கமுடியும்.

மக்கள் நலன்சார்ந்த கொள்கை ரீதியிலான பல்வேறு முக்கிய முடிவுகள் சட்டசபையில்தான் எடுக்கப்படுகின்றன. அதுபோல மாநிலத்தை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக தீர்மானங்களும் அங்குதான் நிறைவேற்றப்படுகின்றன. அதனால் சட்டமன்றம் கூடும் நாட்கள் என்பது மக்களுக்கு மிகவும் பயன் அளிக்கக்கூடியதாகும். ஆனால் நடந்து முடிந் தமிழக சட்டசபையை பொறுத்தமட்டில் போதிய நாட்கள் கூடவில்லையே என்ற மனக்குறை மக்களிடம் இருக்கிறது. 16-வது சட்டசபை தனது பதவிக்காலத்தின் நிறைவை எட்டியிருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தமிழ்நாடு சட்டசபை 2011-க்கு பிறகு அமைந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டிலும் மிகக் குறைந்த நாட்கள் அளவிலேயே செயல்பட்டுள்ளது. அதனால் பல மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. எனவே தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றம் குறைந்தது 100 நாட்களுக்கு மேல் முறையாக நடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டசபை ஆண்டுதோறும் 100 நாட்கள் கூடும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 1952-ம் ஆண்டு முதல் 1957 வரை நடந்த முதல் சட்டசபையில் ஆண்டுக்கு சராசரியாக 64 நாட்கள் கூட்டம் நடந்த நிலையை ஒப்பிடும்போது, 16-வது சட்டசபையில் ஆண்டுக்கு 32 நாட்கள் மட்டும் தான் கூட்டம் நடந்துள்ளது. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த 1971-1975-ம் ஆண்டில் சராசரியாக 70 நாட்கள் நடைபெற்றுள்ளது. அதுபோல எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த 1980-1984-ம் ஆண்டுகளிலும் ஆண்டுக்கு சராசரியாக 70 நாட்கள் கூட்டம் நடந்திருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com