

உலக அளவில் கால்பந்துக்கு அடுத்ததாக அதிக ரசிகர் பட்டாளங்களை தன்வசப்படுத்தியிருப்பது கிரிக்கெட் தான். இந்தியா உள்பட காமன்வெல்த் நாடுகளில், வரைபடங்களில் இடம்பெறாத குக்கிராமங்களில் கூட கிரிக்கெட்டுக்கு பரம ரசிகர்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட்டின் நுணுக்கங்களை தெரிந்த அவர்கள், வீரர்கள் சாதனை படைத்தாலோ அல்லது அணிகள் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டாலோ பந்துவீச்சு நேர்த்தியாக இருந்திருக்கவேண்டும், பவுண்டரிகளையும், சிக்சர்களையும் தெறிக்கவிடும் வகையில் பேட்டிங் செய்திருக்கவேண்டும் என்றெல்லாம் விமர்சகர்கள்போல பேசுவதை மூலை முடுக்கெல்லாம் கேட்கமுடிகிறது. கிரிக்கெட்டை ரசிப்பவர்கள் பொதுவாக தங்களது நாடுகள் வெற்றி பெறவேண்டும் என்று நினைத்தாலும், எதிரணியில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களையும் பாராட்ட தவறுவது இல்லை.
இந்த சூழ்நிலையில், எந்த வங்காளதேசத்தை உருவாக்க இந்தியா முழுவீச்சில் தங்கள் ராணுவத்தை போர்க்களத்துக்கு அனுப்பி நேசக்கரத்தை நீட்டியதோ, அந்த வங்காளதேசம்தான் இப்போது கிரிக்கெட் அரங்கில் இந்தியாவுக்கு எதிராக கொடி பிடித்துக்கொண்டு நிற்கிறது. சமீபத்தில் ஐ.பி.எல். போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதற்கு இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் எதிர்ப்பு கிளம்பியது.
இதன் அனலை தாங்கமுடியாமல் கொல்கத்தா அணியில் இருந்து அந்த வீரர் விடுவிக்கப்பட்டார். இது மதத்தின் அடிப்படையிலான எதிர்ப்பு என்றாலும், அடுத்து வங்காளதேசம், இந்திய மண்ணில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடமாட்டோம். கொல்கத்தாவிலும், மும்பையிலும் நடக்க இருந்த தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை தீவு நாடான இலங்கைக்கு மாற்றவேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை (ஐ.சி.சி.) வற்புறுத்தியது.
ஆனால் ஐ.சி.சி. இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை. இங்குதான் விளையாடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் என்றால் விளையாடமாட்டோம் என்று முரண்டுபிடித்ததால் ஐ.சி.சி., உலகக் கோப்பை போட்டியில் இருந்து வங்காளதேசத்தை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்தை கொண்டுவந்துள்ளது.
இந்தியாவில்தான் விளையாடவேண்டும் என்ற ஐ.சி.சி.யின் முடிவுக்கு 14 நாடுகள் ஆதரவாகவும், பாகிஸ்தான், வங்காளதேசம் மட்டும் எதிராகவும் ஓட்டளித்தன. வங்காளதேச அணியின் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், நாங்களும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகிவிடுவோம் என்று பாகிஸ்தானும் பூச்சாண்டி காட்டுகிறது. அவர்கள் இப்படிப்பட்ட கருத்துகளை தெரிவிப்பது கிரிக்கெட் போட்டியில் அரசியலை ஆயுதமாக பயன்படுத்த நினைக்கிறார்கள் என்றே ஐ.சி.சி. கருதுகிறது.
இது ஒன்றும் இந்தியாவுடன், பாகிஸ்தான் நடத்தும் யுத்தம் அல்ல. அவர்கள் நாட்டை பாதிக்காத ஒரு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு புறக்கணிப்பு முடிவை எடுக்க நினைத்தால், அதற்கான விளைவுகளை பாகிஸ்தான் சந்தித்தே ஆகவேண்டும் என்று ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் கூறினார். இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், போட்டிக்கான தங்கள் அணி வீரர்களின் பெயரையும் அறிவித்துவிட்டது.
ஆனால் தங்கள் அணி உலகக் கோப்பை போட்டியில் விளையாடுமா? என்பதற்கு அரசாங்கத்தின் ஆலோசனையை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம். உலகக் கோப்பை போட்டியில் விளையாடக்கூடாது என்று எங்களது அரசாங்கம் சொன்னால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம் என்று கூறியிருக்கிறது. ஆக, கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் வேண்டாம் என்று 14 நாடுகள் உறுதியாக இருக்கும்போது, பாகிஸ்தானும், வங்காளதேசமும் அரசியலை நுழைத்திருப்பது சரியல்ல. அரசியல் களமும், விளையாட்டு களமும் வேறு, வேறு என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.