இது சாதனை மட்டுமல்ல, சரித்திரம்

3 முறை கோப்பையை வென்ற ஒரே நாடு என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இது சாதனை மட்டுமல்ல, சரித்திரம்
Published on

விடுமுறை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை முதல் இரவு வரை இந்தியாவில் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. பலரும் தொலைக்காட்சியும், செல்போன்களுமே கதியென்று ஆர்வமாக கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தனர். கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கி கடந்த 8-ந்தேதிவரை ஐ.சி.சி. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.

இந்தியா மற்றும் இலங்கையில் இந்த போட்டிகள் நடந்தன. நடப்பு சாம்பியனான இந்தியா உள்பட 20 அணிகள் மல்லுக் கட்டின. வங்காளதேச அணி தொடரை புறக்கணித்தது. பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக விளையாடமாட்டோம் என்று அடம் பிடித்தது. இதற்கு விமர்சனங்கள் குவிந்ததால், வேறுவழியின்றி இந்தியாவுடன் மோதி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.

இப்படி பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் போட்டிகள் அரங்கேறின. சூப்பர் 8 சுற்றில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. இதனால் இந்தியா அவ்வளவுதானா? அரை இறுதிக்கு முன்னேறுமா? என்ற அச்சம் இந்தியர்களிடம் துளிர்விட்டது. வீழ்வேன் என நினைத்தாயோ உலகமே என்று சினம் கொண்ட சிங்கம் போல இந்தியா வீறுகொண்டு எழுந்தது.

அடுத்தடுத்த போட்டிகளில் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்தி அரை இறுதியை அட்டகாசமாக தாண்டி, இறுதி போட்டிக்குள் நுழைந்தது. சஞ்சு சாம்சனின் அமர்க்களமான பேட்டிங், பும்ராவின் மிரட்டல் பந்துவீச்சு, அக்ஷர் பட்டேலின் பிரமாதமான கேட்ச் ஆகியவை இந்தியாவை நிமிர வைத்தது. ஆமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதி போட்டியில் இந்தியாவும்-நியூசிலாந்து அணியும் களம் கண்டன.

முதல் 2 ஓவரில் இந்தியா வெறும் 12 ரன்களை மட்டுமே பெற்று இருந்ததை பார்த்து ரசிகர்கள் என்ன ஆட்டம் சோபிக்கவில்லையே என்று முணு முணுத்த நிலையில், இந்திய அணி வீரர்கள் வேங்கையாக சீறி எழுந்து அடுத்த 4 ஓவர்களில் 80 ரன்களைக் குவித்தனர். 6-வது ஓவரின் முடிவில் அபிஷேக் சர்மாவும், சஞ்சு சாம்சனும் ஆடிய ஆட்டத்தின் வேகம் இனி நிச்சயமாக இந்தியாவுக்கு வெற்றி ஊர்வலம்தான் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

15-வது ஓவர் முடிந்தபோது இந்தியாவிடம் சேர்ந்தது 203 ரன்கள் மட்டுமல்லாமல், வெற்றிக்கோப்பையும் நிச்சயமாகிவிட்டது. 20 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்களை எடுத்தது. இமாலய இலக்கை துரத்தி பிடிக்கும் முனைப்பில் களம் இறங்கிய நியூசிலாந்து நெருக்கடியில் சரணடைந்தது.

பந்துவீச்சு என்றால் இந்த தலைமுறையில் பும் பும் பும்ராதான் என்பது மட்டுமல்லாமல், இவர் இந்தியாவின் பொக்கிஷம் என்ற பாராட்டையும் பெற்றுள்ளார். ஆமதாபாத் ஸ்டேடியம் இந்தியாவுக்கு ராசியில்லாத ஸ்டேடியம் என்று கட்டி எழுப்பப்பட்ட மணல் கோட்டையை நமது வீரர்கள் தவிடு பொடியாக்கி, வாகை சூடி புதிய வரலாறும் படைத்துள்ளனர்.

ஏற்கனவே இந்தியா 2007, 2024-ல் 20 ஓவர் போட்டிகளில் மகுடம் சூடி தற்போது 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளதன்மூலம் 3 முறை கோப்பையை வென்ற ஒரே நாடு என்ற சரித்திர சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக 2-வது முறையும் மற்றும் சொந்த மண்ணிலும் வெற்றி பெற்றிருக்கிறது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது தான் எங்கள் அடுத்த இலக்கு என்று இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியிருக்கிறார். அது நிறைவேறும் காலத்தை எதிர்பார்த்து நாடே காத்துக்கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com