விலை உயர்வை தடுக்க வரி குறைப்பு

கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது கவலையளிக்கிறது.
விலை உயர்வை தடுக்க வரி குறைப்பு
Published on

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்' என்று பெருமையோடு கூறினாலும், செல்வம் கொழிக்கும் எண்ணெய் வளம் இந்தியாவில் இல்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. நமது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது நிலவும் போர் சூழலில், இந்தியாவில் கச்சா எண்ணெயும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயும் 60 நாட்களுக்கான தேவைதான் கையிருப்பில் உள்ளது. அதற்குமேல் என்ன செய்யப்போகிறோம்? என்ற கேள்வி எழுந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையை இந்தியாவுக்காக ஈரான் திறந்துவிட்டு இருப்பதால் நம்பிக்கை ஒளி பிறந்திருக்கிறது. என்றாலும், கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது கவலையளிக்கிறது.

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கச்சா எண்ணெயின் சர்வதேச விலையை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் தானாகவே பெட்ரோல்-டீசல் விலை உயரும், அது குறைந்தால் இதுவும் குறைந்துவிடும். நிலையான விலை இல்லாத போக்கு 2022-ம் ஆண்டு மே மாதம் வரை இருந்தது. அதன்பிறகு, பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் நிலையாக இருந்ததால், எல்லாவற்றையும் திட்டமிட மக்களுக்கும் எளிதாக இருந்தது. விலைவாசியும் அதிகம் உயரவில்லை.

இந்தநிலையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 65 டாலராக இருந்தது. கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து, இப்போது 115 டாலராக எகிறியுள்ளது. இந்த விலை உயர்வு ரஷியா-உக்ரைன் போர் காலத்தில் தொடங்கி இப்போது அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உச்சத்தை அடைந்துள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கும் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் மிகவும் நஷ்டம் அடைந்துள்ள நிலையில், அதை ஈடுகட்ட பெட்ரோல்-டீசலின் விலையை உயர்த்தியே தீரவேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்கு முன்னோட்டமாக பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது. 'நயாகரா' தனியார் சில்லரை விற்பனை நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.3-ம் உயர்த்தியுள்ளது. அடுத்து அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்திவிடுமோ?, சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100.84-ம், டீசல் விலை ரூ.92.39-ம் இனி ஏற்றத்தை கண்டுவிடுமோ? என்று மக்கள் பயந்துகொண்டே இருந்த நேரத்தில், அதை தாங்கிக்கொள்ள மத்திய அரசு முன்வந்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையில் சிறப்பு கூடுதல் கலால் வரியாக ஒரு லிட்டருக்கு கட்டிவந்த ரூ.13-ல் ரூ.10-ஐ குறைத்து, இனி ரூ.3 கட்டினால் போதும் என்றும், டீசலுக்கு கட்டிவந்த ரூ.10-ஐ முழுவதுமாக ரத்துசெய்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இப்போது பெட்ரோலுக்காக கட்டி வந்த மொத்த கலால்வரி லிட்டருக்கு ரூ.21.90 என்பது ரூ.11.90 ஆகவும், டீசலுக்கு உள்ள மொத்த கலால்வரி ரூ.17.80 என்பது ரூ.7.80 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வரிகுறைப்பின் பயன் மக்களுக்கு கிடைக்காது. எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் நஷ்டத்தை ஓரளவு சமாளித்துக்கொள்ள வழிவகுக்கும். இதனால் மத்திய அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு ரூ.1.7 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். மத்திய அரசின் கலால்வரி குறைப்பால் பெட்ரோல்-டீசல் விலை குறையாது. ஆனாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்படுத்திய தாக்கம் பெட்ரோல்-டீசல் விலையில் எதிரொலிக்காது என்ற மனநிறைவு மக்களுக்கு இருக்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com