

இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருப்பது மட்டுமல்லாமல், நமது ஜனநாயக வலிமை மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. ஜனநாயகத்தின் ஆணிவேர் நம்மை ஆளப்போகும் தலைவர்களை நாமே தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை தான். அதனால்தான் இங்கு தேர்தல் நடக்கும்போது அதனை பார்வையிட வெளிநாட்டு பிரதிநிதிகள் படையெடுத்து வருகிறார்கள். மரத்தின் பண்பு பழத்தில் இருப்பதுபோல தங்களை ஆட்சி செய்யும் திறமை, தகுதி யாரிடம் இருக்கிறது? என்பதை துலாக்கோலில் போட்டு தேர்ந்தெடுக்கும் கடமை மக்களிடம் இருக்கிறது. எனவே தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது.
தேர்தல் கமிஷன் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலை நடத்துகிறது. இதில் தமிழ்நாட்டுக்கு வருகிற 23-ந்தேதியும், மேற்கு வங்காளத்திற்கு இரண்டு கட்டங்களாக 23 மற்றும் 29-ந்தேதிகளிலும் தேர்தல் நடக்கிறது. அசாம், கேரளம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 9-ந்தேதி அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது.
அசாமில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளரான ஹிமந்தா பிஸ்வா சர்மா, தற்போது முதல்-மந்திரியாக 2-வது முறையாக போட்டியிடுகிறார். மொத்தம் 126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் கடந்த 2021-ல் பா.ஜனதா 60 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் வென்றது. முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2015-ம் ஆண்டு தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதா பக்கம் வந்தாலும், அவர் மிகவும் பிரபலமானவர். இந்த தேர்தலில் அசாமில் 85.91 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
கேரளத்தை பொறுத்தமட்டில் 140 தொகுதிகளைக் கொண்ட மாநிலமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த 81 வயதான பினராயி விஜயன், ஏற்கனவே 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று இருமுறை முதல்-மந்திரியாக பதவி வகித்து 3-வது முறையாக முதல்-மந்திரி பொறுப்பேற்கும் நோக்கில் களத்தில் இறங்கியுள்ளார். தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கட்சியும் ஓரணியில் இருந்தாலும், கேரளத்தில் இரு துருவங்களாக எதிர், எதிரே போட்டியிடும் கட்சிகளாகவே உள்ளன. அங்கு நடந்த தேர்தலில் 78.27 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
அடுத்து புதுச்சேரியில் பாரம்பரியமாக மாறி, மாறி ஆட்சி அமைவது வழக்கமாக உள்ளது. 30 தொகுதிகளை மட்டுமே கொண்ட புதுச்சேரியில் கடந்த முறை என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி இணைந்து போட்டியிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றி பெற்று குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 1964-ம் ஆண்டு முதல் அங்கு தேர்தல் நடந்தாலும், இந்த தேர்தலில்தான் மிக அதிகபட்சமாக 89.87 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.
இந்த 3 மாநிலங்களிலும் அதிக சதவீத வாக்குப்பதிவை பார்க்கும்போது மக்கள் ஒருமித்த முடிவை எடுத்துவிட்டார்கள் என்றே தெரிகிறது. நடந்து முடிந்த அசாம், கேரளம் மற்றும் புதுச்சேரி தேர்தல் மட்டுமின்றி நடக்கப்போகும் மேற்கு வங்காள தேர்தலில் 3 முறை முதல்-மந்திரியாக இருந்த மம்தா பானர்ஜி 4-வது முறையும், தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக முதல்-அமைச்சர் வேட்பாளராகவும் களமிறங்கி இருக்கிறார்கள். இந்த 5 முதல்-மந்திரிகளும் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்களா? என்பது மே 4-ந்தேதிதான் தெரியும்.