

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைந்ததும் தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலையை வெள்ளிடை மலையாக பிரதிபலிக்கும் வெள்ளை அறிக்கையை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார். அதில், கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து 2026 வரையிலான 25 ஆண்டுகளில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்குமான வரவு-செலவு தெளிவாக படம் பிடித்து காட்டியிருந்தது. அந்த பட்டியலை பார்த்தால் 2021-26 வரையிலான தி.மு.க. ஆட்சி இருந்த 5 ஆண்டுகளில்தான் வரவும் அதிகரித்து இருக்கிறது, செலவும் உயர்ந்திருக்கிறது. ஆனால் பற்றாக்குறையை பார்த்தால் கடந்த மூன்று 5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் வரவு ரூ.4,97,996 கோடியாகவும், செலவு ரூ.5,32,442 கோடியாகவும் இருந்து. பற்றாக்குறை ரூ.34,447 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கடனை பார்த்தால்தான் பயமாக இருக்கிறது.
மின்சார வாரியத்துக்கு உள்ள கடன் ரூ.2.47 லட்சம் கோடி என்று கூறப்பட்டுள்ள அந்த அறிக்கையில், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அதாவது தி.மு.க. ஆட்சியில் மட்டும் ரூ.87,399 கோடி கடன் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. இது மின்சார வாரியத்துக்கு இருக்கும் மொத்த கடனில் 35.4 சதவீதம் என்று அமைச்சர் தெரிவித்தார். ஆனால் இப்போது பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. அரசு, ஒரு ஆண்டில் மட்டும் துணை மின் நிலையங்கள் அமைப்பது உள்பட பல்வேறு தேவைகளுக்காக ரூ.49,532.83 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக கடன் வாங்குவதில் தவறில்லை. அது மூலதன செலவுகளுக்கு முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதில்தான் அதன் பயன்பாடு தெரியும். வீட்டு உபயோகம், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், விவசாய பம்புசெட்டுகளுக்காக வழங்கும் மின்சாரத்துக்காக கிடைக்கும் கட்டணத்தில் இருந்துதான் மின்வாரியத்துக்கு வருமானம் கிடைக்கிறது.
அதனால்தான் மின்சார வாரியத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுதோறும் எவ்வளவு மின்சார கட்டணத்தை உயர்த்தவேண்டும்? என்று 2027-28 வரையிலான 5 ஆண்டுகளுக்கு பட்டியலிட்டு கொடுத்துள்ளது. அதன்படிதான், 2023-ல் 2.18 சதவீதமும், 2024-ல் 4.83 சதவீதமும், 2025-ல் 3.16 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு 3.57 சதவீதம் கட்டணம் உயர்த்தியிருக்கவேண்டும். ஆனால் தி.மு.க. அரசு வீட்டு உபயோகம் மற்றும் சில சிறுதொழில்களுக்கான கட்டண உயர்வை முழுமையாகவும், பகுதியாகவும் ஏற்றுக்கொண்டது. இப்போது அமைச்சர் நிர்மல்குமார் இந்த ஆண்டு கட்டண உயர்வு இல்லை என்று அறிவித்துவிட்டார். இதனால் மாநில அரசு, மின்சார வாரியத்துக்கு ரூ.3,200 கோடி கொடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
மின்கட்டணத்தை மாற்றியமைக்காதது மின்வாரிய சட்டத்தின்படி விதிமீறல் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தலைவரோ, 2 உறுப்பினர்களோ இல்லாமல் அந்த ஆணையத்தில் யாரும் நியமிக்கப்படாமல் காலி இடங்களுடனேயே இருப்பதால் நிர்வாக ரீதியிலான முக்கிய முடிவுகள் எடுக்கமுடியாமல் மின்சார வாரியம் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. இவ்வளவு கடுமையான நிதி நெருக்கடியிலும் உதவி என்ஜினீயர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணை கொடுத்திருப்பதும், மின்சார வாரியத்துக்கு மேலும் 15 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளதும், தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தேர்வு செய்யப்பட்டு காத்திருக்கும் 5,391 கேங்மேன்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருப்பதும் மிகவும் வரவேற்கத்தக்கது