தொழில் வளர்ச்சிக்கு உதவும் துணிச்சலான நடவடிக்கை

கோவாவில் நடந்த 37-வது சரக்கு சேவைவரி கவுன்சில் கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தொழில் வளர்ச்சிக்காக வாரி வழங்கிய தொழில் நிறுவனங்களுக்கான வரி குறைப்புகள் எல்லோரையுமே திக்கு முக்காட வைத்துவிட்டது.
தொழில் வளர்ச்சிக்கு உதவும் துணிச்சலான நடவடிக்கை
Published on

மகிழ்ச்சி. பாராட்டுகள், கோவாவில் நடந்த 37-வது சரக்கு சேவைவரி கவுன்சில் கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தொழில் வளர்ச்சிக்காக வாரி வழங்கிய தொழில் நிறுவனங்களுக்கான வரி குறைப்புகள் எல்லோரையுமே திக்கு முக்காட வைத்துவிட்டது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் பிரதமர், டுவிட்டரில் நிறுவன வரியை குறைத்திருப்பது சரித்திர புகழ் வாய்ந்தது. இந்தியாவில் தயாரிப்போம் என்ற முயற்சிக்கும், உலகம் முழுவதிலும் இருந்து தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், நமது தனியார் நிறுவனங்களிடையே போட்டிகளை மேம்படுத்துவதற்கும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இது மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்று சொன்னது 100-க்கு 100 உண்மையாகும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கு போய்விட்டது எல்லோருக்குமே வருத்தத்தை அளித்துள்ளது. வெகு காலமாகவே இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கான வரி தற்போது இருக்கும் 30 சதவீதத்திலிருந்து, 25 சதவீதமாக குறைக்கவேண்டும் என்ற கோரிக்கை பெருமளவில் இருந்தது. தற்போது இந்த மேல்வரி, கூடுதல்வரி ஆகியவற்றை சேர்த்தால் 34.94 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது நிதி மந்திரி எல்லோருடைய எதிர்பார்ப்புக்கும் அதிகமாக விலக்குகளோ, ஊக்கச்சலுகைகளோ பெறாத நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்திலிருந்து, 22 சதவீதமாக குறைத்து இருக்கிறார். இதன்பிறகு மேல்வரி, கூடுதல் வரிகளையும் சேர்த்தால் நிறுவன வரி 25.17 சதவீதமாக இருக்கும். ஏறத்தாழ 10 சதவீத வரி குறைப்பு என்பது தொழில் நிறுவனங்களுக்கு பெரிய மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் அளிக்கும். இதுபோல, புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு தற்போது 29.12 சதவீத வரி இருக்கிறது. வருகிற அக்டோபர் 1-ந் தேதிக்கு பிறகு தொடங்கப்பட்டு, 2023 மார்ச் 1-ந் தேதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் புதிய நிறுவனங்களுக்கு இனி மேல்வரி, கூடுதல்வரி என அனைத்து உபவரிகளையும் சேர்த்து மொத்த நிறுவனவரி 17.01 சதவீதமாகத்தான் இருக்கும். இந்த வரி குறைப்பு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், இந்திய பங்குச்சந்தையில் பெரிய எழுச்சி ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1921 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 569 புள்ளிகள் அதிகரித்தது. இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த உயர்வு இருந்தது. இதுபோன்ற மேலும் சில அறிவிப்புகளையும் வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். 1991-ம் ஆண்டு இந்தியாவில் தாராளமயமாக்கும் கொள்கை அமலுக்கு வந்ததிலிருந்து நிறுவனவரி இவ்வளவு அதிகமாக குறைக்கப்படுவது இதுதான் முதல்முறை. ஆசிய நாடுகளில் இந்தியாவில்தான் நிறுவனவரி அதிகம் என்ற நிலைமை இப்போது மாறிவிட்டது. அரசின் இந்த அறிவிப்பு உற்பத்தியை பெருக்கும். ஆனால் உற்பத்தி பெருகும் நேரத்தில், வாங்கும் சக்தி அதிகரித்தால்தான் முழுமையான வெற்றி அடைய முடியும். இந்த நேரத்தில் நிர்மலா சீதாராமன் 400 மாவட்டங்களில் வங்கிகளில் கடன் திருவிழாக்கள் நடத்தி, அதிக அளவில் புதிய கடன் வழங்கவேண்டும் என்று அறிவித்திருப்பது, பணப்புழக்கத்தை அதிகரிக்கும். மக்களின் வாங்கும் சக்தியையும் அதிகரிக்கும். மேலும் வாங்கும் சக்தியை அதிகரிக்க வருமானவரி சீர்திருத்தம் தேவை. அரசின் முதலீடுகள் இன்னும் அதிகரித்து, வேலைவாய்ப்பு பெருகவேண்டும். இதுபோன்ற முயற்சிகளால் மக்களிடம் தாராளமாக பணப்புழக்கம் இருக்கும். அதன் பயனாக வாங்கும் சக்தி அதிகரித்து, பொருட்களை வாங்கும்போது பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். நிதி மந்திரியின் அறிவிப்புகளுக்கு உறுதியான பலன் கிடைக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com