

டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு பெயர் சொல்லும் திட்டமாக விளங்கியது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் அங்குள்ள மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் தினமும் ரூ.100 சம்பளத்தில் ஊரக வளர்ச்சித்துறை வேலை கொடுக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் இந்த திட்டம் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்பட்டது. வேலை இல்லாத நாட்களில் இந்த திட்டம் குறைந்தபட்ச வருவாய்க்கு கை கொடுத்தது. ஆணும், பெண்ணும் வேலை செய்ததால் கிராமங்களில் புதிய கட்டமைப்பு வசதிகள் உருவாகின. குறிப்பாக சிறிய வாய்க்கால்கள், குளங்கள் தூர்வாரப்பட்டன. 2014-ல் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டம் நிறுத்தப்படுமோ என்று பரவலாக அஞ்சப்பட்டது. ஆனால் படிப்படியாக இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் குறைக்கப்பட்டதே தவிர முழுமையாக கைவிடவில்லை.
இதற்கு கிராமப்புறங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் இந்த திட்டத்தை பா.ஜனதா அரசாங்கம் ஓட்டை உடைசல் இல்லாமல் சீரமைத்தது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கும் நாட்களை உயர்த்தவேண்டும் என்று விவசாயிகள், அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு பா.ஜனதா அரசாங்கம் வேலை நாட்களை 125 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தது.
இது கடந்த 1-ந்தேதி முதல் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, இந்த திட்டத்தின் பெயர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்பதில் இருந்து 'விக்சித் பாரத் கியாரண்டி ரோஜ்கர் அண்ட் ஆஜிவிகா மிஷன்' என்று மாற்றப்பட்டுள்ளது. பெயர் இதுவாக இருந்தாலும் சுருக்கமாக 'விபி-ஜி ராம் ஜி' என்று அழைக்கப்பட்டு வருகிறது.
திட்டமிட்டே மகாத்மா காந்தி பெயர் மாற்றப்பட்டு, ராமர் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், முன்பு இருந்ததுபோன்று மகாத்மா காந்தி பெயரே இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. ஆனால் மத்திய அரசாங்கம் அதை பொருட்படுத்தாமல் தாங்கள் வைத்த பெயரிலேயே அரசாணையும் வெளியிட்டுவிட்டது.
மேலும் பழைய திட்டத்தின் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு வழங்கும் கூலித்தொகையை நூறு சதவீதம் மத்திய அரசாங்கமே கொடுத்துவந்தது. ஆனால் இப்போது மத்திய அரசாங்கம் 60 சதவீத தொகையை மட்டும்தான் கொடுக்கும். மாநில அரசு மீதம் உள்ள 40 சதவீத செலவை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதனால் இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களைவிட இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் தமிழ்நாட்டுக்குத்தான் கூடுதல் செலவாகிறது.
நடப்பாண்டு இந்த திட்டத்துக்காக புதிதாக ரூ.5 ஆயிரம் கோடியை தமிழ்நாடு ஒதுக்க கோரியுள்ளது. 125 நாள் வேலை திட்டத்துக்கு முதல் தவணையாக மத்திய அரசு ரூ.25 ஆயிரத்து 863 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.2,176.84 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடியும் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொருநாளும் குறைந்தபட்சம் ரூ.300-ல் இருந்து வெவ்வேறு தொகையை தினக்கூலியாக மாநிலங்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் ரூ.336 ஆக இருந்த தினக்கூலி ரூ.345 ஆக அதிகரித்துள்ளது. ஆக பெயர் எதுவாக இருந்தாலும் இனி ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை கூடுதல் ஊதியத்துடன் கிடைக்கும் என்பதில் கிராமப்புற மக்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சிதான். அதிலும் இந்த ஆண்டு பருவமழை காலை வாரிவிட்டதால் இந்த திட்டம் நிச்சயமாக வாழ்வளிக்கும்.