மத்திய பட்ஜெட்டில் ஜென் சி-இன் பங்கேற்பு

ஜென்-சி தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துகளை நிர்மலா சீதாராமன் கேட்க இருக்கிறார்.
மத்திய பட்ஜெட்டில் ஜென் சி-இன் பங்கேற்பு
Published on: 

மத்திய பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, வருகிற 2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டையும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். இது அவர் தாக்கல் செய்யப்போகும் 10-வது பட்ஜெட்டாகும். தொடர்ச்சியாக 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்யும் ஒரே நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்தான்.

இதற்கு முன்பு நிதி மந்திரியாக இருந்த மொரார்ஜி தேசாய் 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்திருந்தாலும், அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்தது இல்லை. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அனைத்து தரப்பினரின் கருத்துகள், ஆலோசனைகளை பெறுவது மரபு. அந்தவகையில், இப்போது தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட்டுக்காக நிர்மலா சீதாராமன் கடந்த 16-ந்தேதி முதல் பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறையினரின் கருத்துகளை பெற்று வருகிறார்.

அந்தவரிசையில் நாளை, ஜென்-சி தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துகளை கேட்க இருக்கிறார். அதாவது பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளில் உள்ள மாணவர் அமைப்பினர், தொழில் கல்வி நிறுவனங்கள் மற்றும் இளைஞர் சங்கங்கள், இளைய சமுதாய தலைவர்களை ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி வளமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற முன்னெடுப்பில், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் முன்னேற்றத்தில் இலக்குகளை நிர்ணயித்துள்ளார். அதனால்தான் அவரது அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுகளில் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம் பேர் 15 வயது முதல் 29 வயது வரை உள்ளவர்களாக இருக்கிறார்கள். 37 கோடி முதல் 38 கோடி வரையிலானோர் இந்த வயது வரம்பில் இருக்கிறார்கள். கடந்த 2024-25-ம் ஆண்டு பட்ஜெட்டில் கூட 4 கோடியே 10 லட்சம் இளைஞர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான வேலைவாய்ப்புடன் இணைந்த சலுகைகள், திறன் பயிற்சிகள் வழங்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதுபோல கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் இளைய சமுதாயத்தினருக்காக பள்ளிகளில் அடல் புத்தாக்க ஆய்வகங்கள் தொடங்கப்படும், உயர்க்கல்வி நிறுவனங்களில், அதாவது கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்தர ஆய்வகங்களில் செயற்கை நுண்ணறிவு சீர்மிகு மையங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதுமட்டுமல்லாமல் கடந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது 30 கல்லூரி மாணவர்கள் அதை நேரில் பார்க்க அழைக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு பட்ஜெட்டுக்காக ஜென்-சி தலைமுறையினரிடம், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனை கேட்பது, அவர்களை அறிவிப்புகளின் பயனாளிகளாக மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைக்கும் பட்ஜெட்டிலும் அவர்களது பங்களிப்பை இடம்பெறச் செய்யும் வகையிலான நல்ல முயற்சியை எடுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

பொருளாதாரத்தை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்புகள், தரமான கல்வி, புதிய திறன்களை அணுகுவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்டவை ஜென்-சி தலைமுறையின் பிரதான எதிர்பார்ப்பாக இருக்கிறது. தங்கள் கருத்துகளை பட்ஜெட்டில் இடம்பெறவைத்து எதிர்காலம் எங்கள் பையில், இந்த தேசம் எங்கள் கையில் என்று ஜென்-சி தலைமுறையினரும், மாணவர்களும் இனி மிகவும் புத்துணர்வோடு நாட்டின் முன்னேற்றத்துக்கான பணிகளில் தங்களை அர்ப்பணிப்போடு ஈடுபடுத்திக்கொள்ளமுடியும்.

X