

புதுடெல்லி,
பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு கொண்டுவந்த யு.பி.ஐ. மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. இதனால், இரவு, பகல் என 24 மணி நேரமும். ஒருசில நொடிகளில் பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும். பணத்தை அனுப்புவதற்கும். பெறுவதற்கும் வங்கி கணக்கு விவரங்களை பரிமாறிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. யு.பி.ஐ. அடையாள எண் அல்லது விரைவுக் குறியீடு (கியூ.ஆர்.கோடு) இருந்தால் போதும். இப்படி வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உற்ற தோழனாக விளங்கிவரும் யு.பி.ஐ. சேவையை நிர்வகிக்கும் தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம், கடந்த மாதம் 15-ந்தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில், பொதுமக்களுக்கு இடையிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்றும், வணிகர்களுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிக பரிவர்த்தனைகளுக்கு 0.40 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ரூ.75 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கான பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த கட்டண நடைமுறை கடந்த 15-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டது. இந்த அறிவிப்பு வியாபாரிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. சில கடைகளில், "ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துங்கள்; அதற்கு மேல் ரொக்கமாக கொடுத்துவிடுங்கள்” என்று வெளிப்படையாகவே வியாபாரிகள் கூறினார்கள். இவ்வளவு தூரம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறிவிட்ட நிலையில், மீண்டும் பழைய முறைக்கே திரும்பவேண்டிய நிலை ஏற்படுமோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்தது.
தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகைகள் அடுத்தடுத்து இன்னும் வரப்போகிற நாட்களில் வர உள்ளன. குறிப்பாக, தீபாவளி காலத்தில் வியாபாரம் களைகட்டும். தீபாவளி போனசும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும். மக்கள் அதிகளவில் பணம் செலவழித்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், வணிக பரிவர்த்தனைகளுக்காக வியாபாரிகள் கட்டணம் செலுத்தவேண்டியிருந்தால், அதை ஏதாவது ஒரு வகையில் வாடிக்கையாளர்களின் தலையில்தான் சுமத்துவார்கள் என்ற எண்ணமும் மக்களிடையே ஏற்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து, தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இந்த கட்டண முறையைத் திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்தினார். இதே கோரிக்கையை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20 வணிகர் சங்கங்களின் தலைவர்களும் முன்வைத்தனர்.
இதற்கிடையே. யு.பி.ஐ. வணிக பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதன் நோக்கம் குறித்து மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் இந்த கட்டண விதிப்பை தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது.
தீபாவளி முடிந்த பிறகு. இந்த நடைமுறையை அமல்படுத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. வியாபாரிகள், பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து இந்த கட்டண விதிப்பை மத்திய அரசு தள்ளிவைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தீபாவளிக்கு பிறகு இந்த நடைமுறையை அமல்படுத்தினாலும், அதே சிரமம்தான் ஏற்படும்.
எனவே, இந்த கட்டண விதிப்பை நிரந்தரமாக கைவிடவேண்டும்.வியாபாரம் எளிதாக நடைபெறவேண்டும். பொதுமக்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இருந்து மீண்டும் பழைய முறைக்கு மாறிவிடக் கூடாது. ஏற்கனவே வங்கிகள் லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும்போது 0.40 சதவீத கட்டணம் தேவையா? என்பதையும் வங்கிகள் பரிசீலிக்க வேண்டும்.