கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழக அரசின் மூத்த அமைச்சர்கள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.
கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள்
Published on

முன்பெல்லாம் மக்கள் திரளும் பொதுக்கூட்டங்களே அரசியல் கட்சிகளின் பலத்தை பிரதிபலிப்பதாக இருந்தன. அதனால்தான் பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என அரசியல் சாணக்கியர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் எல்லாம் விசாலமான இடவசதிமிக்க மைதானங்களில் ஏற்பாடு செய்யப்பட்டன. பரந்த இடமாக இருந்ததால் தலைவர்களின் அனல் தெறிக்கும் பேச்சு முடிந்ததும் மக்கள் நெரிசல் இன்றி எளிதாக கலைந்து சென்றுவிடமுடிந்தது. ஆனால் பிற்காலங்களில் பொதுக்கூட்டங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு பேரணி, சாலை பேரணிகள் (ரோடு ஷோ) ஆகியவற்றை பிரமாண்டமாக நடத்திக்காட்டினால்தான் தங்களுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை படம் பிடித்துக் காட்டமுடியும் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளிடம் மேலோங்கியது.

இந்த பேரணி மற்றும் சாலை பேரணியெல்லாம் குறுகிய சாலைகளில் நடப்பதால் கட்சி தொண்டர்கள் நெருக்கியடித்துக்கொண்டு கலந்துகொள்ளவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய் திறந்த பஸ்சில் இருந்து பேசிய சாலை பேரணி நடந்தது. அப்போது அவரை பார்க்கவேண்டும். அவரது பேச்சை பக்கத்தில் இருந்து கேட்கவேண்டும் என்ற ஆவலில் திரளாக வந்த கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, ஜி.அருள் முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் த.வெ.க. தரப்பில் ஆஜரான வக்கீல், அரசியல் கட்சிகளின் பிரசாரங்களுக்கு போலீசார் காலதாமதம் இல்லாமல் முன்கூட்டியே அனுமதி கொடுத்தால் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய போதுமான நேரம் இருக்கும். கரூரில் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடந்த தங்கள் பேரணிக்கு, ஒரு நாள் முன்னதாகத்தான் அனுமதி கொடுக்கப்பட்டது என்று வாதிட்டார். அரசு தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இறுதியில் நீதிபதிகள், இதுபோன்ற அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கு என்னென்ன வழிமுறைகள், விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்பதை கூறும் வழிகாட்டு நெறிமுறைகளை நவம்பர் மாதம் 11-ந்தேதிக்குள் அரசு உருவாக்கி கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும். அதை செய்ய தவறினால் இத்தகைய கூட்டங்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை 10 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும். போலீசார் அதற்கு குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்பு பதில் தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட நேரிடும் என்று தெரிவித்தனர்.

இது நல்ல தீர்ப்பாகும். அடுத்த 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குகளைப்பெற பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்தும் சூழ்நிலையில் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்? என்று ஐகோர்ட்டு தெளிவான தீர்ப்பை அளித்துவிட்டால், அதை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிப்புடன் பின்பற்றும். இதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது.

இதையெட்டி தமிழக அரசின் மூத்த அமைச்சர்கள், வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகின்றனர். ஐகோர்ட்டின் உத்தரவை நடைமுறைப்படுத்தவேண்டிய பொறுப்பு போலீசாருக்கு மட்டுமல்லாமல், தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளுக்கும் இருக்கிறது. பொதுமக்களும் அதிகம்பேர் கூடும் இடங்களுக்கு முதியவர்கள், குழந்தைகளை அழைத்து செல்லக்கூடாது. கரூர் சம்பவத்தை அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், போலீஸ் உள்ளிட்ட அரசு துறைகளும் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, இனி இதுபோல விரும்பத்தகாத செயல் நடைபெறாததை உறுதி செய்யவேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com