

தமிழகம் இன்னும் 2 மாதங்களில் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் நெருங்கி வருவதால் பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் அணிவகுத்து வரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது சாத்தியமாகவில்லை. மாநிலத்தின் நிதி நிலைமையும், எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? வருவாய் பற்றாக்குறை எவ்வளவு?, நிதிப்பற்றாக்குறை எவ்வளவு?, கடன் எவ்வளவு? போன்ற விவரங்களைத் தாங்கியதாகவே பட்ஜெட் இருந்தது. எதிர்க்கட்சிகளும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என்று கருத்து தெரிவித்திருந்தன. ஆனால் ஏன் எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை? என்பது குறித்து அரசு தரப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. பொதுவாக இடைக்கால பட்ஜெட் என்பது அரசின் சாதனைகளை தெரிவிக்கும் அறிக்கையாகவும், பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் கோரும் அறிக்கையாகவும் இருக்கும்.
இதுதான் இதுநாள்வரையிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடுவது மரபு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால் இந்த இடைக்கால பட்ஜெட் மாநிலத்தின் நிதி நிலையை படம் பிடித்துக்காட்டியுள்ளது. வரும் நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் ரூ.27,703.87 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருவாய் வரும் காலங்களில் ஆண்டுக்கு 8 சதவீதம் வளர்ச்சி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வரிகளில் தமிழக அரசின் பங்கு ரூ.62,530.65 கோடியாக இருக்கும். வரும் ஆண்டுகளில் இந்த தொகை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல வரும் நிதியாண்டில் தமிழக அரசு ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளது.
மேலும் ரூ.60,413.42 கோடி அளவுக்கு பொதுக்கடனை அரசு திருப்பி செலுத்தும். இதன் காரணமாக 31.3.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் அளவு ரூ.10,71,770.34 கோடியாக இருக்கும். இந்த கடன் நிதி மேலாண்மை சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டே இருக்கிறது. இதுபோல தமிழக அரசு வாங்கிய கடன்களுக்காக வரும் ஆண்டில் வட்டி மட்டும் ரூ.78,677 கோடி செலுத்தவேண்டும் என்று இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு கடனா? இவ்வளவு வட்டியா? என்று மலைப்பு ஏற்படலாம். அமெரிக்கா உள்பட வளர்ந்த நாடுகள் அனைத்தும் கடன் வாங்குகின்றன. கடன் வாங்காமல் மாநில அரசுகள் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் தன் நிதி நிலைமையை உயர்த்த மக்களிடம் இருந்து வரி வசூலித்துதான் அந்த செலவுகளை ஈடுகட்டமுடியும்.
கடன் வாங்கும் தொகையை வளர்ச்சி திட்டங்களுக்கும், மூலதன திட்டங்களுக்கும் செலவழித்தால் பரவாயில்லை. ஆனால் ஓட்டுகளை கவருவதற்காக அறிவிக்கப்படும் இலவசங்களுக்காக செலவழிக்கும்போதுதான் அது எதிர்பார்க்கும் நல்ல பலனை தராமல் எதிர்காலத்தில் அந்த கடன் சுமையும், வட்டி சுமையும் மக்களுக்கு அழுத்தத்தை கொடுக்கிறது. 2001-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க., ஆட்சியில் இருந்து வெளியேறும்போது ரூ.34,540 கோடிதான் கடன் இருந்தது. அடுத்து வந்த அரசுகள் தாராளமாக கடன் வாங்கியதால்தான் இன்று ரூ.10 லட்சம் கோடியை தாண்டும் அளவு கடன் பாரம் ஏறியிருக்கிறது. மொத்தத்தில் கடன் அளவை பார்க்கவேண்டியதில்லை. அதனால் மாநிலத்தின் வளர்ச்சி பெருகியிருக்கிறதா? அரசின் வருவாய் அதிகரித்திருக்கிறதா? என்பதையே கணக்கில் கொள்ளவேண்டும்.