மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு!

தமிழக அமைச்சரவை அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்துள்ளது.
மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு!
Published on

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வின் மூலமே மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நீட் தேர்வில் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் கேள்விகளாக இருப்பதால், தமிழக கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியவில்லை என்று பரவலாக எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன.

இந்தநிலையில், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தி.மு.க. சார்பிலும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வருகிற செப்டம்பர் 13-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், உடனடியாக அ.தி.மு.க. அரசு அவசர சட்டம் கொண்டுவரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசாங்கத்தை பொறுத்தமட்டில், இதற்கு எந்த பதிலும் இதுவரை அளிக்கவில்லை.

ஆக, நீட் தேர்வு நடக்கும் இந்த சூழ்நிலையில், தமிழக அரசு ஏற்கனவே அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பொன் கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது. இந்த குழு தன் பரிந்துரையை முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்தது. அதில், அரசுப் பள்ளிக்கூட மாணவர்களுக்கு நீட் தேர்வு மூலம் நடக்கும் மாணவர் சேர்க்கையில் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க கூறியதாக தகவல் வெளியானது. முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூடி இதை பரிசீலித்து, அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்துள்ளது.

ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டாய இலவச கல்வியளிக்கும் சட்டத்தின் கீழ் கடந்த 2013-2014-ம் ஆண்டு முதல் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிக்கூடங்களில் 25 சதவீத இடங்களில் சேர முடியும் என்று இருக்கிறது. இந்த சட்டத்தை பயன்படுத்தி தனியார் பள்ளிக்கூடங்களில் படித்து, தொடர்ந்து கடைசி 4 ஆண்டுகள் அரசுப் பள்ளிக்கூடங்களில் படித்தால், அவர்களும் இந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் பயனை அடைய முடியும். இதுகுறித்து, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும். அரசின் இந்த முடிவால் தமிழ்நாட்டில் 278 அரசுப் பள்ளிக்கூட மாணவர்களுக்கு இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இது நிச்சயம் வரவேற்கத்தக்கது. என்றாலும், அரசுப் பள்ளிக்கூடங்கள் அல்லாமல் தனியார் பள்ளிக்கூடங்களில் படித்து அதிக மதிப்பெண்கள் வாங்கிய 278 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பும் பறிபோய்விடும் என்ற மனக்குறை அவர்கள் மத்தியில் இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மேலும், ஏற்கனவே, மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த நேரத்திலும், தொடர்ந்து ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு கிராமப்புற மாணவர்களுக்கான இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. எனவே, இந்த உள்ஒதுக்கீடும் சுப்ரீம் கோர்ட்டிற்கு போனால் நிலைத்து நிற்குமா?, அல்லது கிராமப்புற மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு நிலைமை ஏற்பட்டு விடுமா? என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com