எல்லா ரெயில் பயணிகளுக்கும் இன்சூரன்சு!

ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் உள்பட அனைத்து பயணிகளுக்கும் 35 காசு பிரீமியம் தொகையுடன் கூடிய இன்சூரன்சு வழங்கப்படவேண்டும் என்பது ரெயில் பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.
எல்லா ரெயில் பயணிகளுக்கும் இன்சூரன்சு!
Published on

கடந்த மாதம் 2-ந்தேதி ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பகானகா ரெயில் நிலையத்தில் ஒரு பயங்கர ரெயில் விபத்து நடந்தது. 128 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை நோக்கி வந்து கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், மெயின் லைனில் செல்லவேண்டிய நிலைக்கு மாறாக சிக்னலில் ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட கோளாறு காரணமாக லூப் லைனில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அங்கு ஏற்கனவே நின்றுகொண்டு இருந்த சரக்கு ரெயில் மீது மிக பயங்கரமாக மோதியது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் அந்த சரக்கு ரெயில் மீது ஏறியது மட்டுமல்லாமல், 22 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு விழுந்தன. அதே நேரத்தில் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி 126 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டு இருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றொரு மெயின் லைனில் கடந்து சென்றது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 ரெயில் பெட்டிகள் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் கடைசி 2 பெட்டிகள் மீது படுவேகத்தில் மோதி ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் 292 பேர் உயிரிழந்தனர். 1,175 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 382 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

ரெயில்வே நிர்வாகம் சார்பில் இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அறிவிக்கப்பட்டது. இதுதவிர பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் ஒடிசா, மேற்கு வங்காள அரசுகளும் நிவாரண தொகை அறிவித்தது.

பொதுவாக ரெயில் பயணிகளுக்கும், பார்சல்களுக்கும் இன்சூரன்சு இல்லை. ஆனால் ஆன்லைன் மூலம் டிக்கெட் ரிசர்வ் செய்பவர்களுக்கு மட்டும் விருப்புரிமை அடிப்படையில் இன்சூரன்சு வழங்கப்படுகிறது. இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் அதாவது ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ஆன்லைனில் ரிசர்வ் செய்பவர்களுக்கு 35 காசு பிரீமிய தொகை கட்டி டிக்கெட் எடுத்து இருந்தால் இதுபோன்ற விபத்துகளில் உயிரிழப்புகளுக்கு ரூ.10 லட்சம், நிரந்தர ஊனத்துக்கு ரூ.10 லட்சம், ஓரளவு ஊனத்துக்கு ரூ.7 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ செலவுக்கு ரூ.2 லட்சம், இறந்தவர்கள் உடல்களை எடுத்து செல்ல ரூ.10 ஆயிரம் என கூடுதலாக வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 35 காசு இன்சூரன்சு பிரீமியம் என்பதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் டிக்கெட் கவுண்ட்டர்களில் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு இந்த இன்சூரன்சு வழங்கப்படுவதில்லை. தினமும் இந்தியா முழுவதும் 2 கோடிக்கு மேல் பயணிகள் செல்கிறார்கள். இதில் பாதிக்கு மேல் கவுண்ட்டர்களில்தான் டிக்கெட் எடுக்கிறார்கள். இந்த நிலையை மாற்றி ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் உள்பட அனைத்து பயணிகளுக்கும் 35 காசு பிரீமியம் தொகையுடன் கூடிய இன்சூரன்சு வழங்கப்படவேண்டும் என்பது ரெயில் பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த 35 காசு அந்த பயணிகளுக்கு ஒரு சமூக பாதுகாப்பாக இருக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com