பறக்கும் சீக்கியரின் வாழ்க்கை தரும் பாடம்

‘பறக்கும் சீக்கியர்’ என்று இந்தியாவே போற்றி புகழ்ந்த 91 வயது தடகள வீரர் மில்காசிங், கொடிய கொரோனாவின் நச்சு கரங்கள் தீண்டி மறைந்துவிட்டார்.
பறக்கும் சீக்கியரின் வாழ்க்கை தரும் பாடம்
Published on

பறக்கும் சீக்கியர் என்று இந்தியாவே போற்றி புகழ்ந்த 91 வயது தடகள வீரர் மில்காசிங், கொடிய கொரோனாவின் நச்சு கரங்கள் தீண்டி மறைந்துவிட்டார். அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் புரட்டி பார்த்தால், இளைஞர்களுக்கு பாடமாக இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்படுவதற்கு முன்பு, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கோவிந்தபுரா ஊரில் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் 15 பேர். பாகிஸ்தான் பிரிவினைக்குப்பிறகு அந்த ஊர் பாகிஸ்தானுக்குள் சென்றஉடன் ஏற்பட்ட கலவரத்தில் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் கொல்லப்பட்டதால், அங்கு இருந்து ரெயிலில் பெண்கள் பெட்டியில் டிக்கெட் எடுக்காமல், ஒளிந்து பயணம் செய்து அகதியாக டெல்லி வந்தார். உடலில் சத்து இல்லாமல் நோஞ்சானாக இருந்த அந்த இளைஞர், வயிற்று பிழைப்புக்காக ராணுவத்தினர் ஷூக்கு பாலீஷ் போடும் வேலையை கூட செய்தார். ராணுவத்தில் சேர 3 முறை தன் முயற்சிகளில் தோல்வி அடைந்து, 4-வது முறையாக வெற்றி பெற்று ராணுவத்தில் சேர்ந்தார். வறுமையும், வாழ்க்கையின் துயரங்களும் ஒரு பொருட்டல்ல, விடா முயற்சிஇருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

அவருக்குள் இருந்த ஓட்டப்பந்தய திறமையை அடையாளம் கண்டது இந்திய ராணுவம். அவர் 1956-ல் மெல்போர்ன் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரராக கலந்துகொண்டார். தொடர்ந்து நடந்த பல ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் போட்டியில் மட்டுமல்லாமல் பல தேசிய போட்டிகளிலும் தங்கப்பதக்கங்களை வாங்கி குவித்தார். 1960-ம் ஆண்டு ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 0.1 செகண்டு வித்தியாசத்தில் விருது பெற முடியாமல் 4-வது இடத்துக்கு வந்தார். ஒலிம்பிக் தடகள போட்டியில் சிறப்பு பெற்ற முதல் இந்தியர் என்றாலும், வெற்றி பெற முடியவில்லையே, தன் நாட்டுக்கு பெருமை சேர்க்க முடியவில்லையே என்ற கவலையில் பல நாட்கள் அழுதார். ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு முக்கியம், காலம் எப்படி பொன் போன்றது, நாட்டுப்பற்று என்பதற்கு இது ஒரு அடையாளமாகும். அந்த ஒலிம்பிக் போட்டியில் அவரது சாதனையை இந்தியாவில் தொடர்ந்து 38 ஆண்டுகள்யாரும் முறியடிக்கவில்லை.

1960-ல் பாகிஸ்தானில் நடந்த சர்வதேச தடகள போட்டியில் கலந்துகொள்ள மறுத்தார். ஆனால் பிரதமர் நேரு அந்த போட்டியில் கலந்துகொள்ள வற்புறுத்தியதால், அங்கு சென்று கலந்துகொண்டு வெற்றி பதக்கத்தை பெற்றார். அப்போது நடந்த விழாவில், பாகிஸ்தான் அதிபர் அயூப்கான், மில்கா! பாகிஸ்தானுக்கு வந்து நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடவில்லை. உண்மையில் நீங்கள் பறந்தீர்கள். பாகிஸ்தான் உங்களுக்கு பறக்கும் சீக்கியர் என்ற பட்டத்தை அறிவிக்கிறது என்றார். அந்த பெயரே எப்போதும் நிலைத்து நின்றது. திறமை இருந்தால், திறமை பரிணமித்தால் எதிரியையும் பாராட்டச்செய்யமுடியும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

சில நாட்களுக்கு முன்பு அவருக்கும், அவர் மனைவிக்கும் கொரோனா தொற்று பாதித்தது. நான் தடுப்பூசி அவசியம் இல்லை என்று நினைத்தேன். குணமடைந்த உடன் தடுப்பூசி போட்டுக்கொள்வேன். எல்லோரையும் தடுப்பூசி போட வலியுறுத்துவேன் என்றார். 59 ஆண்டுகள் மண வாழ்க்கையில் அவருக்கு துணை நின்ற அவரது மனைவி, இந்திய கைப்பந்து அணி கேப்டனாக இருந்த நிர்மல் சைனி மறைந்த 6 நாட்களில் மில்கா சிங்கும் மரணமடைந்தார். தன் வாழ்நாள் இறுதியில் தடுப்பூசி போடவேண்டிய அவசியத்தை பாடமாக கூறிவிட்டு சென்று இருக்கிறார். அவர் ஒரு பேட்டியில், என் கடைசி ஆசை ஒரு இந்திய தடகள வீரர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறவேண்டும் என்பதுதான் என்றார். அவரது கனவை நனவாக்க அவரது வாழ்க்கையையே ஒரு ஊக்கமாக, உத்வேகமாக கொண்டு இந்திய தடகள வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறவேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com