

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எப்போதும், டுவிட்டரில் அனுப்பும் செய்தி, பல அரசியல் கூட்டங்களில் பேசுவதற்கும், பாராளுமன்றத்தில் பேசுவதற்கும், அறிக்கைகள் விடுவதற்கும் மேலான தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது. பெட்ரோல்டீசல் விலை உயர்வு பற்றியும், மத்திய அரசாங்கம் இன்னும் கலால் வரியை குறைக்காமல் இருப்பது பற்றியும் தொடர்ந்து அவர் டுவிட்டரில் செய்திகள் வெளியிடுகிறார். சில நாட்களுக்கு முன்பு ஒரு பஞ்ச் செய்தியை பதிவிட்டு இருந்தார். நல்லவேளையாக குஜராத் தேர்தல் வந்தது. பல பொருட்களின் சரக்கு சேவை வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இப்போது, நல்லவேளையாக கர்நாடகா மாநில தேர்தல் வந்தது. பெட்ரோல்டீசல் விலை உயர்த்தப்படாமல் அதேவிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆக, அடிக்கடி தேர்தல் வருவது மக்களுக்கு நன்மைகளை கொண்டு வரும் என்று அந்த செய்தியை கூறியுள்ளார். ஆம் அது உண்மைதான். ஆனால் கர்நாடகா மாநில தேர்தலையொட்டி, பெட்ரோல் மீதான கலால்வரி குறைக்கப்படவில்லை என்பதுதான் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் விலைக்கேற்பத்தான் பெட்ரோல்டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் வரி இல்லாமல் பெட்ரோல்டீசல் விலை இப்போதுள்ள விற்பனை விலையில் பாதி அளவுதான் வரும். மீதி பாதி அளவு மத்திய அரசாங்கம் விதிக்கும் கலால்வரியாலும், மாநில அரசுகள் விதிக்கும் மதிப்பு கூட்டு வரியாலும் தான் உயர்கிறது.
மத்திய அரசாங்கம் பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.20.06 கலால் வரியாகவும், டீசல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.15.92ம் வசூலிக்கிறது. தமிழக அரசு மதிப்பு கூட்டு வரியாக பெட்ரோல் விலையில் 34 சதவீதம் விதிக்கிறது. டீசல் மீது 25 சதவீதம் வசூலிக்கிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பெட்ரோல்டீசல் விலை உயர்ந்தபோது, கலால் வரி விகிதத்தை குறைத்து ஒரு கட்டுக்குள் வைத்திருந்தார். ஆனால் இப்போது பா.ஜ.க. அரசாங்கம் இதுவரை 9 முறை கலால் வரியை உயர்த்தியுள்ளது. ஒருமுறை மட்டும் லிட்டருக்கு ரூ.2 குறைத்துள்ளது. இப்போது கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகமாக பெட்ரோல் விலையும், இதுவரையில் எப்போதும் இல்லாத அளவுக்கு டீசல் விலையும் உயர்ந்து விட்டது.
திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள நிதி அயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார் பெட்ரோல்டீசல் மீதான வரியை குறைப்பதற்கு இதுதான் சரியான தருணம் என்று உறுதிப்பட தெரிவித்து விட்டார். பெட்ரோல்டீசல் விலை உயர்வால் விலைவாசி பெருமளவில் உயர்ந்துவிட்டது. லாரி அதிபர்கள் இதை எதிர்த்து ஸ்டிரைக் செய்வது பற்றி நாளை முடிவெடுக்கப்போகிறார்கள். இந்தநிலையில், பொருளாதார விவகார செயலாளர் கலால் வரியை குறைக்கும் பரிசீலனை மத்திய அரசாங்கத்திடம் இல்லை என்று கூறியிருக்கிறார். கலால் வரி ஒரு ரூபாய் குறைத்தால் அரசின் வருவாய் ரூ.13 ஆயிரம் கோடி நஷ்டமாகிவிடும் என்று கூறியிருக்கிறார். அரசாங்கத்தின் வருமான இழப்பா?, மக்களின் பாதிப்பா?, தராசில் போட்டுப்பார்த்து மத்திய அரசாங்கம் உடனடியாக கலால் வரியை குறைக்க வேண்டும். தமிழக அரசும் முன்பு இருந்ததுபோல, மதிப்பு கூட்டுவரியை பெட்ரோலுக்கு 27 சதவீதமாகவும், டீசலுக்கு 21.43 சதவீதமாகவும் குறைக்க வேண்டும்.