கோடை விடுமுறை குளிர் தென்றலாகட்டும்

கோடை விடுமுறையின்போது பத்திரிகை, புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து பொதுஅறிவை வளர்க்க செய்ய வேண்டும்.
கோடை விடுமுறை குளிர் தென்றலாகட்டும்
Published on

பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இறுதி தேர்வுகள் முடிந்து இன்னும் சில நாட்களில் கோடை விடுமுறை தொடங்கிவிடும். கடந்த 10 மாதங்கள் கடுமையாக உழைத்து, களைத்து போன மூளைக்கு சற்று ஓய்வு கொடுத்து புத்துணர்ச்சி அளித்தால்தான் அடுத்த கல்வி ஆண்டில் பள்ளிக்கு செல்லும்போது புதிய உற்சாகத்துடன் படிக்கமுடியும்.

ஆனால் பலரும் தங்கள் பிள்ளைகளை அடுத்த ஆண்டு வகுப்புகளுக்கான பாடங்களை படிக்க இப்போதே தயார்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் புதிய படிப்புகளுக்கான வகுப்புகளில் அனுமதித்து விடுகின்றனர். இவ்வாறு கோடை விடுமுறை நாட்களில் அவர்களை படிப்பு ரீதியிலான சித்ரவதைகளை செய்து நடமாடும் எந்திரங்களாக மாற்றிவிடாமல் தானாகவே நல்ல பண்புகளை அறிந்துகொள்ள செய்ய வேண்டும்.

பேராசிரியர் இன்சுவை சொன்னதுபோல, கோடை விடுமுறை வெறும் ஓய்வுக்கான நேரமோ, வேறு படிப்புகளை படிப்பதற்கான நேரமோ மட்டுமல்ல, பிள்ளைகளின் ஆளுமையை செதுக்குவதற்கான பொன்னான வாய்ப்பு. இந்த விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பெற்றோரின் கடமை. வீட்டு வேலைகளில் அவர்களை இணைத்துக்கொண்டு சிறு, சிறு வேலைகளை செய்ய பழக்கவேண்டும். அவர்களுக்கு பொறுப்புணர்வை ஊட்ட முயற்சி எடுக்க வேண்டும்.

அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும். இன்சுவை சொன்னதை ஆழ்ந்து பார்த்தால் அறுசுவையை தாண்டி பல சுவைகள் உள்ளன. இதற்கு பழையகால வாழ்க்கை முறையை பின்பற்றினாலே போதும். அந்த காலங்களில் கோடை விடுமுறையின்போது பிள்ளைகள் தாத்தா-பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி, மாமா, அத்தை என்று உறவினர்களின் வீடுகளுக்கு செல்வார்கள். இதனால் குடும்ப உறவுகள் பலப்படுவதோடு, அன்றாட வாழ்க்கை முறையையும் கற்றுக்கொண்டு வருவார்கள்.

பாட்டிகள் தங்கள் பேத்திகளுக்கு சமையல் கலை, கோலம் போடுதல் என பல கலைகளை கற்றுக்கொடுப்பார்கள். இதேபோல தையல் வேலை, எம்பிராய்டரி கலையையும் படித்துக்கொள்வார்கள். சிறுவர்கள் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் பயிற்சி பெறுவது மட்டுமல்லாமல் கிராமப்புறங்களாக இருந்தால் விவசாய வேலைகளையும் கற்றறிவார்கள். அந்த காலங்களில் சொந்தக்காரர்கள் வீடுகளில் தங்கிக்கொள்ள விசாலமான இடம் இருந்தது.

ஆனால் நகர்ப்புறங்களில் உறவினர்களின் வீடுகள் சிறிய அளவில் இருப்பதால், பிள்ளைகள் வந்தால் எங்கே தங்கிக்கொள்வது என்ற கேள்வி இப்போது வருகிறது. 1962-ல் வெளிவந்த ஒரு திரைப்பட பாடலில் கண்ணதாசன் எழுதிய, "மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம், வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்" என்ற வரிகளை நெஞ்சில் நிறுத்திவிட்டால் போதும், தானாக இடம் உருவாகும்.

இந்த கோடை விடுமுறையின்போது பத்திரிகை, புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து பொதுஅறிவை வளர்க்க செய்யவேண்டும். தாய்மொழியை தாண்டி ஆங்கிலத்தில் பேசும் திறன் அதிகமாக இருந்தால்தான் பல்வேறு உயர் படிப்புகளில் சேரவும், நல்ல வேலைகளை பெறவும் முடியும். இதற்காக பயிற்சி வகுப்புகளில் சேரவேண்டியதில்லை.

நல்ல ஆங்கில புத்தகங்களை படித்தால், அதில் உள்ள அறிவார்ந்த கருத்துகள் மழை பெய்கிறபோது நிலத்தடியில் சேரும் நிலத்தடி நீர் போல ஆழ்மனதில் போய் சேர்ந்துக்கொள்ளும். உரையாடலின்போது அற்புதமாக நுனி நாக்கையும் தட்டும். ஆக மொத்தத்தில் கோடை விடுமுறை கடும் வெயிலை தாண்டி உறவுகளை பலப்படுத்தும் இனிமையானதாக அறிவாற்றலைப் பெருக்கும் பத்திரிகை வாசிப்பு, புத்தகங்களை படிக்க செய்யும் காலமாக தலையெடுத்தால் குளிர் தென்றலாக வாழ்க்கையில் சுகம் அளிக்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com