இதில் உச்சவரம்பு வேண்டாமே!

நாட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. பரவலும் வேகமாக இருக்கிறது. உயிரிழப்புகளும் அதிகமாக இருக்கிறது. ஒரு லட்சம் உயிரிழப்புகளுக்கு மேல் உள்ள நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்திற்கு இந்தியா வந்துவிட்டது.
இதில் உச்சவரம்பு வேண்டாமே!
Published on

நாட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. பரவலும் வேகமாக இருக்கிறது. உயிரிழப்புகளும் அதிகமாக இருக்கிறது. ஒரு லட்சம் உயிரிழப்புகளுக்கு மேல் உள்ள நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்திற்கு இந்தியா வந்துவிட்டது. தமிழ்நாட்டிலும் உயிரிழப்பு, மராட்டிய மாநிலத்திற்கு அடுத்தநிலையில் 2-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு கொடுமையாக இருந்தாலும், நாட்டில் சகஜ வாழ்க்கை திரும்பவேண்டும், பொருளாதார உயர்வு வரவேண்டும், அலுவல்கள் முறையாக நடக்க வேண்டும், தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்கப்பட வேண்டும், வியாபாரங்கள் மீண்டெழ வேண்டும் என்ற நிலையில், இப்போதுதான் அனைத்து துறைகளும் கண்விழிக்க தொடங்கி உள்ளன. ஏற்கனவே மார்ச் மாதத்தில் இருந்து ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்தன. வேலையிழப்புகள் ஏற்பட்டு இருந்தன. இதையொட்டி வங்கிகளில் கடன் வாங்கி மாதத்தவணை கட்டியவர்கள் தத்தளிக்க தொடங்கியநிலையில், ரிசர்வ் வங்கி கை கொடுத்தது. முதலில் 3 மாதம் கடன் தவணையை தள்ளி வைத்து, பிறகு அதனை 6 மாத காலம் நீட்டித்து, அதாவது ஆகஸ்டு மாதம் வரையில் மாத தவணை கட்ட வேண்டாம் என்று அறிவித்தது. இந்த மாத தவணை மொத்த கடன் தவணை செலுத்தும் காலத்தோடு மேலும் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டது. ஆக இது தவணை ரத்து அல்ல. எப்படியும் திருப்பி கட்டத்தான் போகிறார்கள். ஆனால் ஏற்கனவே மாதத்தவணை வட்டியோடு கட்டும் நிலையில் இப்போது அந்த 6 மாதத்தவணையும் அசலோடு சேர்த்து மீண்டும் வட்டிக்கு வட்டி கட்ட வேண்டிய நிலை உருவானது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இப்போது ஒரு பெரிய நிவாரணமாக மத்திய அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டில் சிறு- குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வாங்கிய கடன்கள், கல்வி கடன்கள், வீட்டு கடன்கள், நுகர்வோர் பல பொருட்கள் வாங்குவதற்காக வாங்கிய கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள், மோட்டார் வாகன கடன்கள், தனிநபர் கடன்கள் போன்ற கடன்களுக்காக மட்டும் வட்டிக்கு வட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு உச்சவரம்பாக ரூ.2 கோடி வரை கடன் வாங்கியவர்களுக்கு மட்டும்தான் இந்த சலுகை என்று அறிவித்துள்ளது. இன்றைய நிலையில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு இந்த இனங்களில் ரூ.2 கோடி வரை கடன் வாங்கியவர்களுக்கு மட்டும் அல்ல, எல்லோருக்கும் அந்த வலி இருக்கிறது. கொரோனா பாதிப்பு வலி பெரிய தொழிலதிபர்கள் முதல் அவர்கள் நிறுவனங்களில் வேலைபார்க்கும் கடைக்கோடி ஊழியர்கள் வரை எல்லோருக்குமே ஒன்றுதான். எனவே இந்த நிவாரணத்துக்கு உச்சவரம்பு கூடாது. இப்போதுதான் கண்விழித்து அனைத்து நிறுவனங்களும் மெதுவாக உற்பத்தியை தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் அவர்களை மேலும் கீழே அழுத்தும் வகையில், வாங்கிய கடனுக்கு வட்டிக்கு வட்டி போடக்கூடாது. இந்த ரூ.2 கோடி கடன் வாங்கியவர்களுக்கு வட்டிக்கு வட்டி ரத்து செய்யப்பட்டால் ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.6 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்காது. ஆனால் உச்சவரம்பு இல்லாமல் அனைவருக்கும் வட்டிக்கு வட்டி ரத்து செய்தால் ரூ.10 ஆயிரம் கோடி முதல் ரூ.15 ஆயிரம் கோடி வரை பெற முடியாத நிலை ஏற்படும். மத்திய அரசாங்கம் இதை சமூக நலத்திட்டமாக கருதி அனைத்து கடன்களுக்கான வட்டிக்கு வட்டியை ரத்து செய்ய உதவ வேண்டும். எப்படி மேட்டில் ஏற முடியாமல் தவிக்கும் பாரவண்டியை பின்னால் இருந்து தள்ளிவிட்டு உதவி செய்வோமோ? அதுபோல் வருவாயின்றி தவிக்கும் அனைத்து தொழில்களுக்கும் இதுபோன்ற சலுகைகளை வழங்கி ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com