

காலமெல்லாம் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் உழைத்து உழைத்து களைப்படைந்து போய் நிற்கிற மூத்த குடிமக்களுக்கு தேவையான வசதிகளை, சலுகைகளை அளிக்கும் பொறுப்பு குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் இருக்கிறது. எந்த சமுதாயம், எந்த அரசு, மூத்த குடிமக்களை மதித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருகிறதோ அந்த அரசாங்கம்தான், அந்த சமுதாயம்தான் போற்றுதலுக்குரியதாக இருக்கிறது. அதிலும் இப்போதைய மூத்த குடிமக்கள் மிகவும் சமுதாய பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.
அரசாங்கத்துக்கு கட்டவேண்டிய வரியை கட்டுவதில் மூத்த குடிமக்கள், எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டு நடந்து முடிந்த நிதி ஆண்டில், முதல் 11 மாதங்களில் மூத்த குடிமக்கள் கட்டிய வருமான வரிதான் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அமைந்துள்ளது. மூத்த குடிமக்கள் வரி ஏய்ப்பு செய்வதில்லை, தங்களுக்கு கிடைக்கும் வருமானத்துக்கு அரசாங்கத்தை ஏமாற்றவேண்டும் என்று நினைக்காமல், வருமான வரியை கட்டுவது எல்லோருக்கும் வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாயை வரியாக கட்டியிருக்கிறார்கள் என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் இருந்து தெரியவருகிறது. இது கடந்த நிதி ஆண்டு வசூலான தொகையைவிட 35.5 சதவீதம் அதிகமாகும். அதாவது கடந்த நிதி ஆண்டு முழுவதும் வசூலானது 83 ஆயிரத்து 756 கோடி ரூபாயாகும். இதில் வருமான வரி மட்டும் மூத்த குடிமக்களால் 24 சதவீதம் இந்த நிதி ஆண்டில் அதிகமாக செலுத்தப்பட்டுள்ளது. நிறுவன வரி வளர்ச்சி 16.9 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல், மூத்த குடிமக்களில் வரி கட்டுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது.
2019-2020-ல் 73 லட்சத்து ஆயிரம் பேர் வரி கட்டிய நிலைக்கு மாறாக, 2022-2023-ல் 86 லட்சத்து 71 ஆயிரம் பேர் வரி கட்டியுள்னர். இந்த அளவு வருமான வரி மூத்த குடிமக்களால் கட்டப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. ராணுவ பென்ஷன்தாரர்களுக்கு வழங்கப்பட்ட நிலுவைத்தொகை, சமீபகால பட்ஜெட்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் கிடைத்த அதிக மூலதன ஆதாயங்கள், டிவிடெண்டுகள், அதிக வருமானத்தோடு பணியில் இருந்து ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்கு கிடைத்த ஓய்வுகால பயன்கள், அவர்களின் சேமிப்புகள் ஒரு காரணம் என்றாலும், இப்போதைய மூத்த குடிமக்கள் எந்த சேமிப்பில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்பதை நன்கு தெரிந்தவர்களாக இருப்பதால், அவர்களுக்கு அதிக வட்டி கிடைப்பதும், அவர்கள் கட்டும் அதிக வருமானவரிக்கு முக்கிய காரணமாகும்.
ஆனால் நேர்மையாக வருமான வரி உள்பட அனைத்து வரிகளையும் கட்டும் மூத்த குடிமக்களுக்கு, மத்திய அரசாங்கம் பதிலுக்கு செய்யவேண்டியதை செய்யவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. ஏற்கனவே ரெயில் பயணத்தில் வழங்கிவந்த கட்டண சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலை நாடுகளைப்போல மருத்துவ உதவி, முதியோர் இல்லங்கள் போன்ற பல சமூக நலத்திட்டங்கள் இல்லையே, வரி கட்டாத ஏழை முதியோர்களின் பாதுகாப்புக்காக போதிய அளவு திட்டங்கள் இல்லையே என்பது போன்ற பல கவலைகள் இருக்கின்றன. தங்களுக்கு தேவையான உதவிகள், சலுகைகளை வழங்கவேண்டும் என்பது மூத்த குடிமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.