111 நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட அமைதி

அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
111 நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட அமைதி
Published on

'சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி' என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல, நேரடியான எந்த ஆத்திரமூட்டுதலும் இல்லாத சூழலில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது அமெரிக்கா போரைத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக ஈரானும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி, மோதலை தீவிரப்படுத்தியது. அதிலும் குறிப்பாக, உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாக எந்த நாட்டுக் கப்பலும் செல்லக்கூடாது என்று ஈரான் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்லவேண்டிய ஏராளமான சரக்கு கப்பல்கள் நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டன. ஈரான் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இரு மடங்காக உயர்ந்தது.

இந்த போரின் தாக்கம் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலித்தது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்ந்ததோடு, உரத்துக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இத்தகைய பதற்றமான சூழலுக்கு முடிவுகட்டும் நோக்கில் பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் விளைவாக, தற்போது அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் அருகேயுள்ள வெர்சாய் அரண்மனையில் இருந்தவாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்தவாறு அந்நாட்டின் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தப்படி 14 அம்ச செயல்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாக வேண்டும்.

அதாவது, அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்தப்படவேண்டும். ஹார்முஸ் நீரிணை உடனடியாக திறக்கப்படவேண்டும். பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமெரிக்கா, மேற்கு ஆசிய நாடுகள் சேர்ந்து ரூ.28 லட்சம் கோடி ஈரானுக்கு வழங்கவேண்டும் என்பது உள்பட 14 அம்சங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த வெர்சாய் அரண்மனைக்கு என்று ஒரு வரலாறு உண்டு. முதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வர 1919-ம் ஆண்டு இதே வெர்சாய் அரண்மனையில் அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன. இப்போது டிரம்ப் அமர்ந்து கையெழுத்திட்ட மண்டபத்தில்தான் அப்போதும் 14 செயல்திட்டங்களை அடிப்படையாக வைத்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த போராலும், இப்போது கையெழுத்தான ஒப்பந்தத்தாலும், ஈரானை விட அமெரிக்காவுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற கார்டியன் பத்திரிகையில் இந்த ஒப்பந்தம் பற்றி வெளியிடப்பட்ட தலையங்கத்தில், "ஒவ்வொரு சிவப்பு கோடும் அழிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா எந்த அளவுக்கு பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்துகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பயன் கிடைத்துள்ளது. அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகளால், குறைந்த விலையில் வழங்கும் ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் வாங்குவதை 2019-ம் ஆண்டு முதல் நிறுத்தியிருந்தது. தற்போதைய ஒப்பந்தத்தை பயன்படுத்தி இந்தியா இனி ஈரானில் இருந்து கச்சா எண்ணெய், கியாஸ் வாங்கினால், அதன் எதிரொலியாக நமது நாட்டிலும் அதன் விலை கணிசமாக குறையும். இதுபோல உரம் இனி தாராளமாக கிடைக்கும். இந்தியாவில் இருந்து அரிசி உள்ளிட்ட பொருட்களையும் ஏற்றுமதி செய்யமுடியும். மொத்தத்தில், 111 நாட்களுக்கு பிறகு நடைமுறைக்கு வந்துள்ள இந்த ஒப்பந்தம் அனைத்து நாடுகளுக்கும் அமைதியை கொடுத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com