

பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத வகையில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களையும், முடிவுகளையும் வெளியிட்டார். அமெரிக்கா-ஈரான் போரால் இந்தியாதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நமது தேவையில் 85 சதவீத கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம். இதில் பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் இருந்துதான் கடல் மார்க்கமாக வந்துகொண்டிருந்தது. ஆனால் இப்போது ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதாலும், வளைகுடா நாடுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாலும் அந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வருவது பெருமளவில் தடைபட்டுள்ளது.
இதனால் விலையும் ஏறத்தாழ இரு மடங்காகிவிட்டது. இதுபோல தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் விலையும் கடந்த ஆண்டு விலையைவிட 30 சதவீதம் அளவுக்கு எகிறிவிட்டது.
இந்தியாவின் மொத்த இறக்குமதி செலவில் தங்கம், வெள்ளி இறக்குமதி செலவு 10 சதவீதத்துக்கு மேல் போய்விட்டது. இந்தநிலையில், ரூபாய் மதிப்பும் மிக வேகமாக சரிந்துவருகிறது. இது இறக்குமதி செலவை ரூபாய் மதிப்பில் மிகவும் உச்சத்தில் ஏற்றிக்கொண்டு இருக்கிறது.
பெட்ரோல்-டீசல், தங்கம்-வெள்ளியின் விலை அதிகரித்துக்கொண்டு இருப்பதால் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதாவது ஏற்றுமதி செலவைவிட இறக்குமதி செலவு அதிகரித்து வருகிறது. பொருளாதார நிலை கவலை அளிப்பதாக இருக்கிறது. உடனடியாக இந்த பொருட்களின் இறக்குமதியை குறைப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு அவசர அவசிய தேவையாகிவிட்டது.
இதனால்தான் பிரதமர் மோடி பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை அனைவரும் குறைக்கவேண்டும், மெட்ரோ போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தவேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்தார். உபதேசம் பண்ணுகிறேன் அது ஊருக்குத்தானடி எனக்கில்லை என்பதுபோல அல்லாமல் அவருடைய பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையையும் பாதியாக்கிவிட்டார்.
இதுமட்டுமல்லாமல் கடந்த 14-ந்தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல்-டீசலின் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான இறக்குமதி வரி இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தோடு, இந்தியா கையெழுத்திட்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் தங்க இறக்குமதிக்கு 5 சதவீத வரி மட்டும் இருந்ததால், துபாயில் இருந்தே அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இப்போது அந்த இறக்குமதி வரியும் 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆக தங்கம்-வெள்ளியின் இறக்குமதிக்கு பெரிய முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.
இது தங்கம்-வெள்ளி கடத்தி கொண்டுவருவதற்கு பின்பக்க வாசலை திறக்கும் என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மக்களும் தங்கம் வாங்குவதில் மாற்றத்தை முன்னெடுக்கிறார்கள்.
புதிய தங்க நகைகளை ரொக்கமாக கொடுத்து வாங்குவதற்கு பதிலாக, தங்களிடம் உள்ள பழைய நகையை கொடுத்து விரும்பும் புதிய மாடலில் மாற்றிக்கொள்ளும் பழக்கம் இப்போது அதிகமாகிவிட்டது.
இதுமட்டுமல்லாமல் தங்கள் நகையைக் கொடுத்து அதை உருக்கி, புது மாடலில் செய்யவும் ஆர்டர் கொடுக்கிறார்கள். தங்கத்தின் மீது இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் தங்கத்தின் தேவை 60 டன் குறையும். இதனால் மத்திய அரசுக்கு இறக்குமதி செலவு ரூ.24 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு பங்கு முதலீடுகள் வெளியேறிக்கொண்டு இருப்பது, கச்சா எண்ணெய் உயர்ந்துகொண்டிருப்பது. ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டிருப்பது, இறக்குமதி செலவு விண்ணை முட்டிக்கொண்டிருப்பது போன்ற சூழலில் இப்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்திருப்பதால் சரக்கு கட்டணமும் எகிறும்.
அதேபோல் உணவு பொருட்களின் விலையும் உயரும். கடந்த 42 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒட்டுமொத்த பணவீக்கம் 8.3 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது மேலும் உயரும் சூழலில் உள்ளது. ஆக மொத்தத்தில் இது அனைத்தும் மக்கள் மீது பெருஞ்சுமையை ஏற்றுவதை உறுதி செய்துவிட்டது.