தட்டு இருக்கிறது; சாப்பாடு எப்போது?

கோவை மண்டலத்துக்கு லைசென்சு எடுத்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம், அங்கு குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு சப்ளை செய்யும் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கிவிட்டது.
தட்டு இருக்கிறது; சாப்பாடு எப்போது?
Published on

சமீபத்தில் திருச்சி வந்த பிரதமர் நரேந்திரமோடி, பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்தார். அப்போது, ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் முக்கியமான திட்டமாக, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், எண்ணூர்- திருவள்ளூர்- பெங்களூரு - புதுச்சேரி- நாகப்பட்டினம்- மதுரை- தூத்துக்குடி வரையிலான 488 கிலோ மீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயுக் குழாய் திட்டம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், 697 கிலோ மீட்டர் நீளமுள்ள விஜயவாடா- தர்மபுரி பெட்ரோலிய குழாய் திட்டம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

எண்ணூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் இயற்கை எரிவாயு குழாய் திட்டம் ரூ.2,793 கோடி மதிப்பிலானது. இயற்கை எரிவாயு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக எண்ணூர் துறைமுகத்தில், துறைமுக பொறுப்பு கழகம் நிலம் கொடுத்தபிறகு, அதில் 50 லட்சம் டன் திறன்கொண்ட ஒரு இயற்கை எரிவாயு முனையம் அமைக்க 12 ஆண்டுகள் ஆனது. இப்போது அந்த முனையத்தில் இருந்து காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக தூத்துக்குடிக்கு செல்லும் இந்த குழாய் அமைக்க 5 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

இந்த இயற்கை எரிவாயு 3 வகையாக பயன்படுத்தப்படுகிறது. முதலாவதாக இந்த குழாய்க்கு இணை குழாய் சிறிய அளவில் போடப்பட்டு தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்த பணிகள் இப்போது முடிந்து, பல பெருநிறுவனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கப்படுகிறது. அடுத்து, ஆங்காங்கே பேபி ஸ்டேஷன் போட்டு, இந்த இயற்கை எரிவாயுவுக்கு அழுத்தம் கொடுத்து, அழுத்தம் ஏற்றப்பட்ட இயற்கை எரிவாயுவாக பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பணிகளும் இப்போது நடந்து வருகிறது.

அடுத்து, வீடுகளுக்கு சமையல் கியாஸ் சிலிண்டருக்கு பதிலாக நேரடியாக குழாய் மூலம் சப்ளை செய்வதுதான். இதனால், வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் செலவில் 30 சதவீதம் மிச்சமாகும். இதற்காக, பூகோள ரீதியாக 15 இடங்கள் பிரிக்கப்பட்டு, சில நிறுவனங்களுக்கும், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கும் லைசென்சு கொடுத்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை செயல்படுத்த தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனி கொள்கையை வகுத்து கொடுத்து இருக்கிறது. ஆக, பிரதான குழாயில் இயற்கை எரிவாயு வர தடையில்லை, அரசும் உதவ தயாராக இருக்கிறது, ஆனால் லைசென்சு எடுத்த நிறுவனங்கள்தான் பணிகளை தொடங்காமல் இருக்கிறது.

கோவை மண்டலத்துக்கு லைசென்சு எடுத்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம், அங்கு குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு சப்ளை செய்யும் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கிவிட்டது. சுற்றுச் சூழலை கெடுக்காத, பசுமை எரிசக்தியான இந்த குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தில், தட்டு போட்டாகிவிட்டது, சாப்பாடு எங்கே? என்று கேட்கும் நிலைதான் இப்போது இருக்கிறது. மத்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். லைசென்சு எடுத்தவர்கள் உடனடியாக வீடுகளுக்கு குழாய் மூலம் சமையலுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் பணிகளை தொடங்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com