

சென்னை,
இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய வரிகள் இன்றளவும் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. ஒவ்வொரு தலைமுறையும் தாங்கள் அதற்கு முந்தைய தலைமுறையைவிட அறிவாற்றல் மிகுந்தவர்கள், தங்களுக்கு பிறகு வரும் தலைமுறையைவிட ஞானவான்கள் என்று கற்பனை செய்கிறார்கள் என்று எழுதியிருந்தார். எப்போதுமே இளைஞர் சக்திக்குத்தான் ஆற்றலும், வீரமும் அதிகமாக இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின்போதும் இளம் வீரர்களின் வேகம்தான் மிக உச்சத்தில் இருந்தது. பெருந்தலைவர் காமராஜர், கொடிகாத்த குமரன், கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் என்று ஒரு பெரிய பட்டியலையே அந்த இளைஞர் சமுதாயத்தில் இருந்து சொல்லிக்கொண்டே போகலாம்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் 1967-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் காங்கிரசை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு அந்த ஆண்டில் தி.மு.க.வும். தொடர்ந்து அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சியில் அமர வைத்தது. இந்த ஆண்டு நடந்த தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்ததற்கும், அவருக்குப் பின்னால் 'ஜென்-சி' மற்றும் 'ஜென்-ஆல்பா' இளைஞர் சமுதாயம் பக்கபலமாக நின்றதுதான் காரணம் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இவ்வளவு ஏன் 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடிக்குக் கிடைத்த இளைஞர் சமுதாயத்தின் ஆதரவுதான் என்று சி.எஸ்.டி.எஸ்.-லோக்நிதியின் தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 46 சதவீத ஓட்டுகள் 18 வயதில் இருந்து 25 வயது வரையில் உள்ளவர்களிடம் இருந்து கிடைத்திருக்கிறது. ஆனால் 56 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து 41 சதவீத வாக்குகள்தான் அறுவடை செய்யப்பட்டிருக்கிறது.
தேர்தலில் மட்டுமல்லாமல் சமூக நீதி முயற்சிகளிலும் 'ஜென்-சி' பங்குதான் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் இன்றைய இளைஞர்களுக்கு பொதுவாழ்வில் மிக அதிக ஆர்வம் இருப்பதை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சட்டசபையிலேயே தெரிவித்து இருக்கிறார். நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத்தொடரின் நிறைவு நாளில் உரையாற்றிய ஜே.சி.டி.பிரபாகர், சட்டசபை நிகழ்ச்சிகளைக் காண இளைஞர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. நிகழ்ச்சிகள் இப்போது முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. டெலிவிஷனில் பார்த்துவிடலாம் என்றாலும், நேரடியாகப் பார்க்க இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகம் பேர் சட்டசபைக்கு வந்திருக்கின்றனர். சட்டசபை நடந்த 28 நாட்களில் மட்டும் 32 ஆயிரத்து 55 பேர் நேரடியாக வந்து, அவை நடவடிக்கைகளை பார்த்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள். மேல்நிலைப் பள்ளிகளில் படிப்பவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு சட்டசபை நிகழ்வுகளை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. பொது வாழ்வில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம்தான் இதற்கு முக்கிய காரணம். சராசரியாக 20 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே ஆண்டுதோறும் இதுவரை சட்டசபை நிகழ்வுகளை நேரில் பார்க்க வந்த நிலையில், இந்த முறை 76 பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் வந்துள்ளனர் என்று ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்திருக்கிறார். ஆக இன்றைய இளைஞர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் அரசியலிலும், பொது வாழ்விலும் ஏற்பட்டுள்ள ஆர்வத்தைப் பார்க்கும்போது நாளைய சமுதாயம் மிகவும் பிரகாசமாக தெரிகிறது.