காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பதே சாலச்சிறந்தது!

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 1,706.89 சதுர கிலோமீட்டர் வனப்பகுதி உள்ளது.
காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பதே சாலச்சிறந்தது!
Published on

ஒரு மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு. பச்சை பசேல் என்று பசுமை போர்வையை சுமந்த வனப்பரப்பு இருந்தால்தான் அங்கு மழை மட்டுமல்ல. பிற வளங்களும் செழிக்கும். தமிழ்நாட்டில் மொத்த வனப்பரப்பு, மூன்றில் ஒரு பங்கை எட்டுவதற்குக்கூட இயலாத அளவில் 24.47 சதவீதமாக உள்ளது. அதில் 20.34 சதவீதம் வனப்பரப்பாகவும், 4.13 சதவீதம் மரங்களை கொண்ட பரப்பாகவும் இருக்கிறது. அதிக வனப்பரப்பினை கொண்ட பட்டியலில் ஈரோடு, கோவை, திண்டுக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்ததாக 5-வது இடத்தில் நீலகிரி உள்ளது. "மலைகளின் ராணி" என்று அழைக்கப்படும் நீலகிரி மலையில் தவழ்கிறது கோடை வாசஸ்தலமான ஊட்டி.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 1,706.89 சதுர கிலோமீட்டர் வனப்பகுதி உள்ளது. இது அந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 66 சதவீதமாக இருக்கிறது. இதனால் சூரியன் ருத்ர தாண்டவம் ஆடும் கோடை காலத்திலும், ஏ.சி. போட்டது போன்று மிதமான குளிர் நிலவுவதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் திரளாக நீலகிரிக்கு வருகின்றனர். பல பிரபலங்களும் தங்கள் ஓய்வுகாலத்தை இயற்கையோடு ஒன்றிய நீலகிரி மலையிலேயே கழிக்கவிரும்புகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக மறைந்த பீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷா திகழ்ந்தார். அவர் ஓய்வுபெற்ற பின் நீலகிரியில் உள்ள குன்னூரில் வீடு கட்டி வாழ்ந்தார். பலரின் புகலிடமாக விளங்கும் நீலகிரி மலை, தற்போது அனலை கக்கும் எரிமலையாக மாறியுள்ளது.

Also Read
நியூசிலாந்து இனி வர்த்தக நட்பு நாடு
காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பதே சாலச்சிறந்தது!

நீலகிரியில் உள்ள பைக்காரா, கிளன்மார்கன், பார்சன் பள்ளத்தாக்கு, மசினகுடி உள்ளிட்ட பல இடங்களில் கடந்த மாதம் 15-ந்தேதி திடீரென காட்டுத்தீ பிடித்தது. இது மளமளவென பரவியது. 500-க்கும் மேற்பட்ட வனத்துறையினர். மாநில பேரிடர் மீட்பு படையினர் 60 பேர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் போராடி, ஒருவழியாக 15 நாட்களுக்கு பின்னர் தீயை அணைத்தனர். எனினும் வெந்து தணிந்த சாம்பல்களில் கங்குகள் முழுமையாக அணையாமல் இருப்பதால். அதில் இருந்து தீப்பொறி அவ்வப்போது கிளம்பி வருகிறது. இந்த தீ காரணமாக ஏறத்தாழ 5 ஆயிரம் ஏக்கர் வனப்பரப்பு சேதமடைந்துள்ளது. காடுகளில் தீ தானாகவே ஏற்படுவது அரிது. சில நேரங்களில் மின்னல் தாக்கி காட்டுத்தீ ஏற்படுகிறது. ஆனால் பெரும்பாலான தீ விபத்துகள் மனிதர்களின் அலட்சியத்தால் தான் நடக்கின்றன.

சிகரெட்டை புகைத்துவிட்டு அணைக்காமல் போடுதல், குப்பைகள், விவசாயக் கழிவுகளை எரித்தல், வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு பெற தீ மூட்டுதல் போன்ற செயல்களே இதற்கு காரணமாகின்றன. சமீபத்தில் நடந்த புலி தாக்குதல்களின் பின்னணியிலும் சில இடங்களில் தீவிபத்துகள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. நீலகிரியில் மட்டும் இந்தாண்டு இதுவரை சிறிய மற்றும் பெரிய என 422 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வனத்துறை, காட்டுத்தீ ஏற்படுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. அதன்படி, வெளிநாட்டு இன மரங்களை அகற்றுதல், கட்டுப்பாட்டு மையங்களை அமைத்தல், செயற்கைக்கோள் எச்சரிக்கை முறை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்ட பிறகு அதை அணைப்பதைவிட, அதற்கான காரணங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதே சாலச்சிறந்தது. எனவே காட்டுத்தீ குறித்து வனத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com