

தற்கால சமுதாயம் துணிச்சல் மிக்கதாக இருக்கவேண்டுமென்றால், இளைஞர் சமுதாயம் குறிப்பாக மாணவ சமுதாயம் எதையும் தாங்கும் இதயம் கொண்டதாக, எந்த சூழ்நிலையையும் எதிர்நோக்கும் மனோதைரியம் கொண்டதாக இருக்கவேண்டும். அந்த காலங்களில் அப்படி ஒரு அசாத்தியமான மனப்பக்குவத்தை கொண்டிருந்த மாணவ செல்வங்கள் இப்போது வாழ்க்கையில் சிறு தோல்விகள், ஏமாற்றங்கள், சறுக்கல்களைக்கூட தாங்கிக்கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக்கொள்ளும் துயரமான சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
காரணங்களை பார்த்தால் இதற்காகவா தற்கொலை செய்வார்கள்? என்று துயரம் கலந்த வியப்பு ஏற்படுகிறது. பெற்றோர் செல்போன் வாங்கி தரவில்லை, செல்போனில் அடிக்கடி பேசுவதை கண்டித்தார்கள், தேர்வு எழுத பயம், தேர்வில் தோல்வி, சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்தார்கள் என்பது போன்ற சின்னஞ்சிறு காரணங்களுக்காகக்கூட தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு போய்விடுகிறார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த தற்கொலை சம்பவங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது.
2021-ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள். அதில் 940 பேர் மாணவர்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை. 2022-ம் ஆண்டும் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் 10 ஆயிரத்து 692 பேர் தற்கொலை செய்துகொண்டதில், 525 பேர் மாணவர்கள் என்று வந்துள்ள புள்ளிவிவரங்களை பார்க்கும்போது பலத்த அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது. ஆக மாணவர்களின் கல்வியில் காட்டும் அக்கறையை விட பல மடங்கு அவர்களுக்கு மன திடத்தை உருவாக்கவேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.
இன்றைய மாணவ பருவத்தினர் அறிவில் பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், உடலளவில் பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், மனதளவில் மிக பலவீனமாக இருக்கிறார்கள். எதையும் தாங்கும் மனப்பக்குவம் இல்லை, சிறு விஷயங்களுக்கு கூட உணர்ச்சிவசப்பட்டு உலகில் வாழ்ந்து என்ன பயன்? என்ற எல்லைக்கு சென்றுவிடுகிறார்கள். இந்த உணர்வு எல்லையில் இருந்து மாணவர்களை உடனடியாக வெளியே கொண்டுவந்துவிடவேண்டும். மனதளவில் அவர்களை உறுதியானவர்களாக மாற்றவேண்டும்.
உலகில் புகழ்பெற்ற பல சாதனையாளர்கள் வாழ்வில் தங்கள் மாணவ பருவத்தில் தோல்விகள், ஏமாற்றங்களை சந்தித்து அதையெல்லாம் தாண்டித்தான் உச்சநிலைக்கு வந்தார்கள் என்பதை வாழ்வியல் பாடமாக கற்றுக்கொடுக்கவேண்டும். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளிலும், துணை மருத்துவ கல்லூரிகளிலும் 'மனம்' என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டு, மனநல நல்வாழ்வு மன்றங்கள் அமைக்கப்படும் திட்டம் வகுக்கப்பட்டு, அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் உடனடியாக மனநல மருத்துவரை தொடர்புகொள்ளும் வகையில் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் 'மனம்' அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டம் பின்னர் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். மருத்துவ கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் கல்லூரி அளவிலும், பள்ளிக்கூட அளவிலும் அவர்களின் வயதுக்கேற்றவாறு வேறு வகைகளில் செயல்படுத்தப்படவேண்டும். சமீபத்தில் 'தினத்தந்தி'யில் வெளிவந்த பொதுமக்கள் கருத்துக்கேட்பு செய்தியில் பல மக்கள் கூறும்போது மனநல வகுப்புகள் தொடங்கப்படவேண்டும், மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று தெரிவித்த கருத்துகளையும் அரசு பரிசீலிக்கவேண்டும்.