

பரமபதம் விளையாட்டில் ஏணியில் ஏறி மேலே சென்றுகொண்டிருக்கும்போது, பாம்பு கடித்தால் அப்படியே கீழே இறங்கவேண்டிய நிலை ஏற்படும். இதைத்தான் அந்த காலங்களில் சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்று பழமொழியாக சொல்வார்கள். அதுதான் இப்போது அமெரிக்கா-ஈரான் போரில் நடந்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 28-ந்தேதி உலகமே எதிர்பார்க்காத நேரத்தில் அமெரிக்கா, ஈரான் மீது போர் தொடுத்து அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா காமேனியையும், அவர் குடும்பத்தினரையும் மட்டுமல்லாமல் ராணுவ தளபதிகளையும் கொன்று குவித்தது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இந்த போரின் காரணமாக ஈரான் தன்னுடைய ஹார்முஸ் நீரிணையை மூடியதால் இந்தியா உள்பட பல நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டு இருந்தன. கொரோனா காலத்தை நினைவுபடுத்தும் வகையில் பல வீழ்ச்சிகளை நாடுகள் எதிர்கொண்டன.
நல்ல வேளையாக கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இருதரப்பு போர் நிறுத்தம், கச்சா எண்ணெய் மற்றும் உரம் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்துக்காக கப்பல்கள் தாராளமாக சென்று வர ஹார்முஸ் நீரிணை திறப்பு, ஈரான் மீதான தடைகள் நீக்கம் என்பது போன்ற 14 அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் அணைந்து போன நெருப்புக் கோளங்களில் இருந்து திடீரென்று பலமாக தீப்பற்றி எரிவதுபோல மீண்டும் போர் வெடித்தது. இது உலக நாடுகளுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்லும் கப்பல்கள் ஈரான் கடலோரத்தில் உள்ள வழித்தடம் வழியாகத்தான் செல்லவேண்டும், ஓமன் கடற்கரை வழியாக கப்பல்கள் சென்றால் தாக்குதல்கள் நடத்துவோம் என்று தொடர்ந்து ஈரான் மிரட்டல் விடுத்துக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் அயதுல்லா காமேனியின் உடல் அடக்கம் நேற்று நடந்தநிலையில் அதற்கு ஒரு நாளைக்கு முன்பு ஹார்முஸ் நீரிணையில் ஓமன் கடற்கரை வழியாக சென்றதாக மார்ஷல் தீவு, சவுதி அரேபியா மற்றும் லைபீரியா நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக அமெரிக்காவும் ஈரான் நாட்டின் துறைமுக நகரங்கள் உள்பட அந்நாட்டில் உள்ள 80 இடங்களில் குண்டு மழை பொழிந்தது. நேற்று இரண்டாவது நாளாக 90-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த தாக்குதல்களை நடத்தியது.
போர் நிறுத்தம் விடை பெற்று, மீண்டும் தாக்குதல் பலமடைந்துவிட்டது. இந்தியாவில் இப்போதுதான் கச்சா எண்ணெய், உரம் வரத்து சீரடைந்து சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டு இருந்த நேரத்தில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துகொண்டே போகிறது. ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துகொண்டே இருக்கிறது. ரஷியா, இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெயை கொடுத்துக்கொண்டு இருந்தாலும், நமக்கு ஈரான்தான் பக்கத்து நாடு. அங்கிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால்தான் போக்குவரத்து செலவும், விலையும் குறைவாக இருக்கும்.
இந்த போரால் பலமுனை பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிக்கொண்டு இருக்கும் இந்தியாவில் மீண்டும் பல பாதிப்புகள் ஏற்படுவதோடு, பங்கும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. முதலீட்டாளர்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அமெரிக்கா-ஈரான் யுத்தம், சத்தம் இன்றி நித்தம் ஒரு பிரச்சினையை இந்தியாவில் கிளப்பிக்கொண்டு இருக்கிறது.