

அமெரிக்கா கடந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து, ஈரான் மீது அதிரடி தாக்குதலை மேற்கொண்டுவருகிறது. பதிலுக்கு ஈரானும், அமெரிக்காவுக்கு இணையாக ஆக்ரோஷத்தோடு முழுவீச்சில் போர்க்களத்தில் இறங்கிவிட்டது. அமெரிக்க ராணுவத்தளங்கள். நிறுவனங்கள் இருக்கும் மேற்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துகிறது. ஏவுகணைகள் தயாரிப்பில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளோம் என்று ஈரான் பிரகடனப்படுத்தி இருப்பதை பார்க்கும்போது, அதற்கு ஆயுத பற்றாக்குறை சமீபத்தில் வருவதைப்போல தெரியவில்லை. ஒவ்வொருநாளும் அமெரிக்கா-ஈரான் போர் பற்றி வரும் செய்திகள் கவலை அளிக்கும் வகையிலேயே இருக்கிறது. அமெரிக்கா, ஈரான் மட்டுமல்லாமல் இஸ்ரேலும் போரில் இறங்கிவிட்டது. இதில் முக்கியமாக கச்சா எண்ணெய் கிணறுகள் மீதும் தாக்குதல்கள் அதிக அளவில் நடக்கின்றன.
இந்த போரினால் சண்டையிடும் நாடுகள் மட்டுமல்லாமல், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகளும் குறிப்பாக, இந்தியாவும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெயில் 60 சதவீதம் வளைகுடா நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதில் 90 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. இப்போது அந்தவழியாக வர தடை இருப்பதாலும், கச்சா எண்ணெய் கிணறுகள் தாக்கப்பட்டு உற்பத்தி குறைந்து இருப்பதாலும், ஒரு பீப்பாய்க்கு 65 டாலர் என்று இருந்த கச்சா எண்ணெய் விலை, நாள்தோறும் உயர்ந்து நேற்று 112.19 டாலர் என தாங்கமுடியாத விலையாக அதிகரித்திருக்கிறது. இந்த போர்ச்சூழல் தொடர்ந்து நீடித்தால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில் அடிமேல் அடியாக போர் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நமது பங்கு சந்தையில் இருந்து வெளியேறிக்கொண்டிருப்பதாலும், எல்லாவற்றுக்கும் மேலாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து கொண்டு இருப்பதாலும் ரூபாய் உள்பட பல நாட்டு பணமதிப்பு குறைந்துகொண்டே போகிறது. அந்தவகையில், இந்தியாவின் 'ரூபாய்', ஜப்பானின் 'யென்', பிலிப்பைன்சின் 'பிசோ', இந்தோனேசியாவின் 'ருபியா', தென்கொரியாவின் 'வோன்' போன்ற பல ஆசிய நாடுகளின் பண மதிப்பு குறைந்திருக்கிறது. இதில் ரூபாய் மதிப்பு பெரும் சரிவை கண்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 108 காசுகள் குறைந்து, இதுவரை இல்லாத வகையில் ஒரு டாலருக்கு இணையாக ரூ.93.71 ஆக பெரும் வீழ்ச்சியை அடைந்தநிலையில், நேற்று மீண்டும் ரூ.94.01 என்று வீழ்ச்சியடைந்துள்ளது. இது அடுத்த சில நாட்களில் ரூ.95-ஐ தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதால் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் பள்ளத்துக்கு சென்றுவிடுமோ? என்ற கவலை இருக்கிறது. இப்போது கச்சா எண்ணெயின் விலை உயர்வும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் நமது ஏற்றுமதி செலவை மிகவும் அதிகமாக்கிவிடும். குறிப்பாக கச்சா எண்ணெயை மிக அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். ஏற்றுமதியாளர்களுக்கு பயன் என்றாலும், அதனால் சாதாரண பொதுமக்களுக்கு பெரிய பயன் ஏற்பட்டுவிடாது. மாறாக விலை உயர்வால் அதிக இன்னலுக்குதான் தள்ளப்படுவார்கள். 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்று பாரதியார் பாடியது போல, 'என்று கலையும் இந்த போர் மேகங்கள்' என்று உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஏங்குகிறார்கள்.