

தமிழகத்தில் பரவலாக அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கு முடிவுரை எழுத முதல்-அமைச்சர் விஜய் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக மின் பகிர்மானக் கழகமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் பசுமை மின்சாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் உத்வேகம் அடைந்துள்ளன.
பசுமை மின்சக்தி என்பது சூரிய வெப்பத்தில் இருந்தும், காற்றாலை மற்றும் கடல் அலைகள் மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்வதாகும். பசுமை மின்சக்தி உற்பத்தியில் சுற்றுச்சூழல் மீதான தாக்கம் குறைவாக இருக்கும். அதனால், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாது. இதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி, 'பிரதமரின் சூர்ய கர் முப்த் பிஜிலி யோஜனா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய ஒளி மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். அந்தவகையில், வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்படும். சூரிய ஒளியை உள்வாங்கிக்கொண்டு. அந்தப் பேனல்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இரவு நேரத்திலும் இந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையில் பேட்டரிகளில் சேமித்து வைக்கவும் முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ், வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்திப் பேனல்களை நிறுவி, தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்பவர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதோடு தமிழக அரசும் சிறப்பு கூடுதல் மானியம் வழங்குவது மக்களைப் பெரிதும் ஊக்குவித்து வருகிறது. இதன்படி, ஒரு கிலோவாட் வரை சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் பேனல்களை நிறுவினால், மத்திய அரசு ரூ.30 ஆயிரமும், தமிழக அரசு ரூ.5 ஆயிரமும் மானியமாக வழங்குகின்றன.
2 கிலோவாட் திறன் கொண்ட அமைப்புக்கு மத்திய அரசு ரூ.60 ஆயிரமும், தமிழக அரசு ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ.70 ஆயிரமும், 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன்கொண்ட சூரிய மின்சக்தி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.78 ஆயிரமும், தமிழக அரசு ரூ.22 ஆயிரமும் என மொத்தம் ரூ.1 லட்சம் வரை மானியம் கிடைக்கின்றன. தற்போது வரை தமிழ்நாட்டில் 97,732 வீடுகளில் இந்த சூரிய ஒளி மின்சக்தி இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
வீடுகளில் ஒரு கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதற்கு சராசரியாக ரூ.1 லட்சம் என்ற அடிப்படையில் கிலோ வாட் திறனுக்கு ஏற்ப செலவுத்தொகை இருக்கும். இந்தநிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் ஒரு லட்சம் வீடுகளில் இந்த சூரிய ஒளி மின்சக்தி இணைப்புகளைப் பொருத்துவதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அதிகாரிகளை முழுவீச்சில் களமிறக்கியுள்ளார் முதல்-அமைச்சர் விஜய்.
மக்கள் இதற்கான பதிவுகளை எளிதாக மேற்கொள்ள https://www.tnebltd.gov.in/usrp/index.xhtml உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டால், மின்சாரக் கட்டணத்துக்காக தங்கள் கையில் இருந்து நிறைய பணம் செலவிடுவதைத் தவிர்க்க முடியும் என்று மின் பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
ரூ.1 லட்சம் வரை மானியம் பெற்று மரபுசாரா பசுமை மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்து பயன்படுத்துவதற்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்த இதுவே நல்ல தருணம். இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்தில் மட்டும் 28,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வானம் அள்ளித்தரும் வற்றாத கதிரவனின் கதிர். இருளை விரட்டி இல்லங்கள் தோறும் வெளிச்சமாய் ஒளிரட்டும்.