செயற்கை நுண்ணறிவுக்கு சிறப்பு நகரம்

முதன் முறையாக ஏ.ஐ.-க்கென அறிவகம் என்ற பெயரில் ஒரு சிறப்பு நகரம் உருவாக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவுக்கு சிறப்பு நகரம்
Published on

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பல புதுமைகள் இருக்கின்றன. 35 பேர் கொண்ட அந்த பட்டியலில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 4 பேரும், இதுவரை இல்லாத வகையில் தலித் சமுதாயத்தை சேர்ந்த 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்று இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் த.வெ.க. வாக்குறுதியாக கொடுத்ததுபோன்று செயற்கை நுண்ணறிவுக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்காலம் - செயற்கை நுண்ணறிவு

அவர் வேறு யாருமல்ல 60 வயதான வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ. குமார். இவர் என்ஜினீயரிங் படித்துள்ளதோடு பெங்களூருவில் உள்ள இந்திய நிர்வாகவியல் கழகத்தில் வர்த்தக மேலாண்மை படித்தவர். செயற்கை நுண்ணறிவை எப்படி பயன்படுத்தமுடியும்? என்பதை நன்றாக தெரிந்தவர். எதிர்காலம் செயற்கை நுண்ணறிவுக்குத்தான் என்பது உலகம் முழுவதும் நன்கு உணரப்பட்டுள்ளது.

த.வெ.க. தேர்தல் அறிக்கை

அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் செயற்கை நுண்ணறிவை பள்ளிகளில் இருந்தே பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நேரத்தில், இதற்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்புக்குரியது. அரசு தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் இதற்கென தனியாக நிதி ஒதுக்கவும் நிதி அமைச்சகத்தில் பணிகள் நடந்துவருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் த.வெ.க. தேர்தல் அறிக்கையில் கூறிய 4 முன்னெடுப்புகளையும் நிறைவேற்றுவதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. தேர்தல் அறிக்கையில் செயற்கை நுண்ணறிவு பொருளாதார திட்டம் என்ற தலைப்பில் 2035-ம் ஆண்டுக்குள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் கூடுதலாக 1.7 டிரில்லியன் அதாவது 1.7 லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.163 லட்சம் கோடி) உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

5 லட்சம் இளைஞர்கள்

இதில் தமிழர்களும் பயனடையும் வகையில் ஏ.ஐ. தொழில் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். அதை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகள் மூலம் 2031-க்குள் செயற்கை நுண்ணறிவு துறையில் திறன்பெற்ற 5 லட்சம் இளைஞர்கள் உருவாக்கப்படுவார்கள். மருத்துவம், விவசாயம், உற்பத்தி, தமிழ்மொழி, காலநிலை ஆகிய 5 பிரிவுகளில் சீர்மிகு செயற்கை நுண்ணறிவு மையங்கள் அமைக்கப்படும்.

இந்தியாவில் முதல் ஏ.ஐ. அமைச்சகம் அமைக்கப்பட்டு, அதன் சார்பில் ஒவ்வொரு அரசு துறையிலும் ஒரு முதன்மை செயற்கை நுண்ணறிவு அதிகாரி நியமிக்கப்படுவார். இந்த அமைச்சகம் ஏ.ஐ. தொழில்நுட்ப முன் முயற்சிகளை முன்னெடுக்கும். தமிழ்நாடு தொழில் முனைவோருக்கு கட்டணமில்லா ஏ.ஐ. சேவை வழங்கப்படும்.

அறிவகம்

இந்தியாவிலேயே முதன் முறையாக ஏ.ஐ.-க்கென அறிவகம் என்ற பெயரில் ஒரு சிறப்பு நகரம் உருவாக்கப்படும். இதில் ஏ.ஐ. பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மையம், செமிகண்டக்டர், ஹார்டுவேர் சோதனை ஆய்வகம், நவீன குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டதையெல்லாம் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.

தமிழ்நாட்டின் வெற்றிப்பாதை

ஏ.ஐ.க்கு தனி அமைச்சகத்தை தமிழக அரசு தொடங்கியதுபோல, கேரளத்திலும் தனி அமைச்சகம் தொடங்கப்பட்டுள்ளது. ஆக ஏ.ஐ. மூலம் முன்னேற்றம் காணுவதில் தென் மாநிலங்களுக்கு இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி தொடங்கிவிட்டது. இதில் தமிழ்நாட்டின் வெற்றிப்பாதை என்பது அடுத்து தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் தெரிந்துவிடும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பாதையை ஏ.ஐ.தான் காட்டும் என்பதால், த.வெ.க. அரசின் செயல் திட்டங்களே புதிய நம்பிக்கை ஒளியை கொடுக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com