

மழலையர் வகுப்பில் இருந்து உயர்க்கல்வி வரை இறுதி தேர்வு முடிவுகளை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பார்கள். ஏனெனில் அந்த முடிவுகள்தான் அவர்களின் அடுத்த கட்டத்துக்கான வாசல்களை திறந்து வைப்பதாக இருக்கும். பொதுவாக மாணவர்கள், ஆசிரியர்கள் கணிக்கும் மதிப்பீடுகளும், தேர்வு முடிவுகளும் ஓரளவுக்கு ஒன்றாகவே இருக்கும். அந்த அளவுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் மாணவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. இருக்கவும் வேண்டும். ஆனால் சமீபகாலங்களாக இந்த நம்பிக்கை உடைந்துவிடுமோ? என்ற சந்தேகம் வரும் வகையில் சில நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு நீட் தேர்வை 22.79 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். அவர்கள் தேர்வு முடிவுக்காக எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில் இடியென நீட் தேர்வு ரத்து என்ற தகவல் வந்தது. இதற்கு காரணமாக வந்த தகவல்கள்தான் மிகவும் அதிர்ச்சியை கொடுத்தன.
வினாத்தாள்கள் கசிவு என்று எளிதாக சொல்லிவிட்டார்கள். பொதுவாக நீட் தேர்வில் ஒரு மதிப்பெண் கூட சில நேரங்களில் மாணவர்களின் தலைவிதியையே மாற்றி எழுதிவிடும். இந்த நிகழ்வில் வினாத்தாள்கள் பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு விலை போயிருக்கிறது. மறு தேர்வு வருகிற 21-ந்தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமையால் அறிவிக்கப்பட்டாலும், தேர்வு ரத்தானதால் மாணவர்களுக்கு ஏற்பட்ட காயத்தை யாராலும் ஆற்றமுடியாது. இந்த காயமே ஆறாத நிலையில் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல' மற்றொரு முறைகேடும் அம்பலத்துக்கு வந்திருக்கிறது. நடந்து முடிந்த சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வை நாடு முழுவதும் 17.68 லட்சம் பேரும், தமிழகத்தில் மட்டும் 88,146 பேரும் எழுதி இருக்கிறார்கள். இந்த தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட தவறுகள் நாட்டையே உலுக்கியிருக்கிறது. இந்த தவறுகளை கண்டுபிடித்தது, வெளிக்கொண்டுவந்தது அந்த தேர்வை எழுதிய 3 மாணவர்கள்தான்.
இந்தமுறை விடைத்தாள்கள் திருத்தும் பணியில் பேனாவால் திருத்தும் வழக்கமான நடைமுறை பின்பற்றப்படவில்லை. மாறாக டிஜிட்டல் முறையில் ஆன்லைன் ஸ்கிரீன் மார்க்கிங்' என்று சொல்லப்படும் புதிய முறையில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டது. அதாவது விடைத்தாள்களை 'ஸ்கேன்' செய்து அதை கம்ப்யூட்டர்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். ஆசிரியர்கள் அதை கம்ப்யூட்டர் திரையிலேயே பார்த்து விடைகளை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்குவார்கள். தற்போது நடந்த முறைகேடு என்னவென்றால், ஒரு மாணவனின் விடைத்தாளில் முதல் பக்கம் அவன் எழுதிய விடைத்தாளும், மற்ற பக்கங்கள் வேறொரு மாணவனின் விடைத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளதை மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த மாணவனே கண்டுபிடித்துவிட்டார். டிஜிட்டல் விடைத்தாள்கள் படிக்கமுடியாத அளவுக்கு மங்கலாக இருந்ததாக மாணவர்களும் புகார் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல், சி.பி.எஸ்.இ. இணையதளம் 'ஹேக்கிங்' செய்யப்பட்டது, ஆன்லைன் ஸ்கிரீன் மார்க்கிங் முறையில் திருத்த விடைத்தாள்களை ஸ்கேன் செய்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்யும் டெண்டரிலும் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையிலேயே சி.பி.எஸ்.இ. கல்வி வாரிய தலைவர், செயலாளர் மாற்றப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. இறுதித்தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். மறுமதிப்பீடு முடிந்து வரும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் உயர் படிப்புக்கு செல்லமுடியும். ஒரு பக்கம் மீண்டும் நீட் தேர்வு, மறுபக்கம் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு மறுமதிப்பீடு என இவையெல்லாம் உயர் படிப்பில் சேருவதை தாமதப்படுத்திவிடும். இந்த நிலை இனி ஒருபோதும் ஏற்படக்கூடாது. இந்த தேர்வுகள் மட்டுமல்ல அனைத்து தேர்வுகள் மீதும் மாணவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை மீண்டும் ஏற்படுவதை கல்வி அமைச்சகம் உறுதி செய்யவேண்டும்.