பிம் செயலி பயன்பாட்டில் தமிழ்நாடு

பிம் செயலியை, தற்போது வரை 31 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
பிம் செயலி பயன்பாட்டில் தமிழ்நாடு
Published on

பண்டைய காலந்தொட்டு இன்றளவும் பண்டமாற்று முறை உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கிறது. இதற்கிடையில் வங்கி கணக்குகளில் போட்டு வைத்து இருக்கும் பணத்தை 'செக்' மூலம் பரிமாற்றம் செய்யும் முறை வந்தது. அதன்பின் கார்டுகள் வந்தன. இதன்மூலம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ஏ.டி.எம். மூலம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்குக்கு பணப்பரிமாற்றம் செய்ய நெட் பேங்கிங் வசதிகள் வந்தன. இவை எல்லாவற்றையும் விட மிக எளிதாக பண பரிமாற்றத்துக்கு தேசிய பணப்பரிமாற்ற கழகத்தின் யு.பி.ஐ. வந்திருக்கிறது. இதன்மூலம் இருந்த இடத்தில் இருந்தே கண் இமைக்கும் நேரத்தில் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு செல்போன் மூலம் பணம் அனுப்பிவிடமுடியும். தற்போது சாலையோர கடை முதல் பெரிய மால்கள் வரை பெரும்பாலும் யு.பி.ஐ. மூலமே நிதி பரிமாற்றம் நடக்கிறது.

இந்த யு.பி.ஐ. சேவையை பல்வேறு நிறுவனங்கள் வழங்கினாலும், முதல் இடத்தில் போன் பே, 2-வது இடத்தில் கூகுள் பே இருக்கின்றன. இந்த சங்கிலியின் மற்றொரு இணைப்பாக நமது நாட்டின் சுதேசி செயலியான பிம் செயலி களத்தில் இறங்கி வெற்றிகளை குவித்து வருகிறது. கூகுளின் ஜி-பே செயலி அந்நிய நாட்டு செயலியாகும். பணப்பட்டுவாடாவுக்கு இந்திய செயலியான பிம் செயலி எவருக்கும் சளைத்ததல்ல என்றவகையில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பிம் செயலியும் இந்திய அரசுக்கு சொந்தமான தேசிய பணப்பரிமாற்ற கழகம் உருவாக்கிய செயலிதான். இது 2016-ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும், இப்போது அது மேம்படுத்தப்பட்ட சேவையாக 3.0 என்று வந்த பிறகுதான் பிரபலமடைய தொடங்கியுள்ளது.

இப்போது ஆங்கிலம், தமிழ் உள்பட 15 மொழிகளில் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் பாமர மனிதனுக்கும் இது எளிதாக இருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் பிம் செயலியில் 26.20 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.29 ஆயிரத்து 650 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதில் மற்ற மாநிலங்களைவிட அதிக பங்காற்றி தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இந்த பிம் செயலியை, தற்போது வரை 31 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். பிம் செயலியின் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது அரசு செயலி என்பதால் நம்பகத்தன்மை அதிகமாக உள்ளது. பிம் செயலியில் முன்பைவிட இப்போது கேஷ் பேக் சலுகை அதாவது ஒரு பரிமாற்றம் செய்த அடுத்த நொடியிலேயே அந்த பரிமாற்ற தொகைக்கு ஏற்ப பணப்பரிசும் வழங்கப்படுகிறது. குறிப்பாக ரூ.550-க்கு பெட்ரோல் போட்டு, அந்த பணத்தை பிம் மூலம் செலுத்தினால் உடனடியாக நமது கணக்கில் ஒரு தொகை வரவாக வந்து விழுந்து விடுகிறது.

மற்ற எந்த யு.பி.ஐ. செயலியிலும் இந்த அளவுக்கு ரொக்க சலுகை இல்லை. இந்த செயலி குறித்து தமிழக மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. எனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தவேண்டிய வரி மற்றும் கட்டணத்தை பிம் செயலி மூலமே மக்கள் கட்டவும், அதை உள்ளாட்சி அமைப்புகள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எளிமையாக இருக்கும் பிம் செயலி மக்களின் ஆதரவை வேகமாக பெற்றுவருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com