முதியோர் மாநிலமாக மாறி வரும் தமிழ்நாடு

2036-ம் ஆண்டில் அதாவது இன்னும் 10 ஆண்டுகள் கழித்த பிறகு தமிழகத்தில் மக்கள்தொகை 8 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முதியோர் மாநிலமாக மாறி வரும் தமிழ்நாடு
Published on: 

இந்தியாவில் அதிக முதியோர் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. 2050-ம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 21 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாநிலம் உற்பத்தியை பெருக்கி வளர்ச்சியில் உச்சியை தொடவேண்டும் என்றால் அங்கு இளைஞர்களின் எண்ணிக்கை அதாவது வேலை பார்க்கும் வயதில் உள்ளவர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தால்தான் சாத்தியமாகும். ஆனால் வருங்கால சமுதாயம் எட்டப்போகும் வளர்ச்சிக்கு துணையாக இளைஞர்களின் எண்ணிக்கை இருக்குமா? என்பது, இப்போதுள்ள பிறப்பு விகிதம் வேகமாக சரிந்து வருவதை பார்த்தால் பெரிய சந்தேகத்தை மட்டுமல்லாமல் கவலையையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது. தமிழ்நாட்டின் மக்கள்தொகை தற்போது 7.76 கோடியாக உள்ளது. 2011-ம் ஆண்டு 7.2 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை 15 ஆண்டுகளில் சற்றுதான் உயர்ந்திருக்கிறது. அதுபோல 2036-ம் ஆண்டில் அதாவது இன்னும் 10 ஆண்டுகள் கழித்த பிறகும் தமிழகத்தில் மக்கள்தொகை 7.8 கோடியாகத்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருவதும். முதியோர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதும்தான் இதற்கு காரணமாகும். 1971-ம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு சராசரியாக 3.9 குழந்தைகள் என்று இருந்த பிறப்பு விகிதம், இப்போது 1.3 குழந்தைகள் என்று வேகமாக சுருங்கி விட்டது. ஆக இப்போதுள்ள நிலையில் ஒரு தம்பதிக்கு சராசரியாக 2 குழந்தைகள் என்ற நிலை நிச்சயமாக இல்லை. குழந்தை பிறந்தது முதல் 14 வரை வயது உள்ள குழந்தைகளின் விகிதம் மொத்த மக்கள்தொகையில் 2011-ல் 23.6 சதவீதமாக இருந்தது. இது கணிசமாக குறைந்து அதாவது 18.3 சதவீதம் அளவுக்கு சரிந்து 2036-ல் 15.6 சதவீதமாக அதலபாதாளத்துக்கு போய்விடும் என்ற கவலைக்குரிய கணக்கீடு வெளிவந்துள்ளது. இதுபோல 15 வயது முதல் 59 வயது வரையிலான உழைக்கும் வர்க்கத்தின் எண்ணிக்கையும் 65.8 சதவீதத்தில் இருந்து 63.6 சதவீதமாக குறைந்துவிட்டது.

எதிர்காலத்தில் இது மேலும் குறையும் என்ற அச்சம் இருக்கிறது. சிறு குழந்தைகள் முதல் உழைக்கும் வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்ட நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துவிட்டது. மொத்த மக்கள்தொகையில் 2011-ல் இத்தகைய முதியவர்களின் சதவீதம் 10.6 சதவீதமாக இருந்த நிலை மாறி, 2036-ல் 20.8 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் மனிதர்களின் வாழ்நாள் சராசரியாக ஆண்களுக்கு 71.7 வயதாகவும். பெண்களுக்கு 75.8 வயதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு 100 குடிமக்களில் 16 பேர் இளமையின் வேகம் குறைந்து, அனுபவத்தின் ஆழத்தை கண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்திய அளவிலும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 11 சதவீதமாக உள்ள நிலையில், 2050-ல் இது 21 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக முதியோர் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. ஆக உழைக்கும் சமுதாயம் குறைந்து முதியோர் சமுதாயமாக தமிழ்நாடு மாறி வருவதை கருத்தில்கொண்டு, ஆந்திரா போல பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தமிழக அரசும் பல்வேறு நிதி உதவிகளை அறிவிக்கவேண்டும். அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் 3-வது பிரசவத்துக்கு ஓராண்டு விடுப்பு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது நிச்சயமாக அரசு ஊழியர்கள் குழந்தை பெற்றெடுப்பதை ஊக்குவிக்கும்.

X