

ஜனநாயக நாடான இந்தியா 28 மாநிலங்களையும், 8 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியது. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் அதிகார பகிர்வு இடைவெளியை சமன்படுத்தவேண்டும் என்பது மாநிலங்களின் நீண்டகால கோரிக்கையாகும். இதற்காக மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்ற கோரிக்கையை அறிஞர் அண்ணா முன்வைத்தார். அவரைத்தொடர்ந்து மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கத்தை இந்தியா முழுவதும் கேட்கும்படி ஒலித்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி. இதற்காக அவர் 1969-ம் ஆண்டு அமைத்த நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையில், மத்திய அரசிடம் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை, நாணயம் மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய 4 துறைகள் இருக்கவேண்டும், கல்வி, மக்கள் நல்வாழ்வு, விவசாயம் உள்ளிட்ட பிற அனைத்து துறைகளும் மாநில அரசுகளிடம் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தது.
இதனடிப்படையில் 1974-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தந்தையின் வழியில் வீறுநடைபோடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் கொள்கைகளை மேம்படுத்தவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிக்கூறுகளை ஆராய்ந்து அதுகுறித்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்யவும் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி, மாநில திட்டக்குழு முன்னாள் தலைவர் மு.நாகநாதன் ஆகிய 3 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்தார். இந்த குழு 387 பக்கங்கள் கொண்ட தங்கள் அறிக்கையின் முதல் பகுதியை தாக்கல் செய்துள்ளது. இதில் மத்திய அரசும், மாநில அரசுகளும் போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளர்களாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதில், ஒரே நாடு ஒரே மொழி என்பதை கைவிடவேண்டும். இருமொழிக் கொள்கைக்கு மாறவேண்டும். அரசியலமைப்பு சட்டம் 345-ஐ திருத்தி, இந்தி என்ற சொற்களை நீக்கி மாநிலங்கள் தங்கள் பயன்பாட்டில் உள்ள மொழியை மட்டும் ஆட்சி மொழியாக பயன்படுத்தவேண்டும். மாநில சட்டசபையில் பெரும்பான்மை உறுப்பினர்களால் ஒப்புதல் அளிக்கப்படும் 3 பேரில் ஒருவரையே கவர்னராக நியமிக்கவேண்டும். கவர்னரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கவேண்டும். கவர்னராக நியமிக்கப்படுபவர் கடைசி 5 ஆண்டுகளில் எந்தவொரு அரசியல் கட்சியிலும் பதவி வகித்திருக்கக்கூடாது. ஆட்சி நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகியவற்றில் பதவி வகித்திருக்கக்கூடாது. சட்டசபை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி, கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிக்கவேண்டும். மக்களவையின் 550 இடங்களையும், சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையையும் மாற்றக்கூடாது.
கட்சி தாவிய அமைச்சர்களை பதவி இழப்பு செய்வதோடு, அரசியல் வாழ்க்கைக்கும் தடைபோடவேண்டும். கல்வியை மாநில பட்டியலில் சேர்க்கவேண்டும். ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களை முழுமையாக செயல்படுத்தி முடிக்கும் வரை பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரக்கூடாது. மத்திய அரசின் திட்டங்களுக்கான மொத்தசெலவில் 80 சதவீதத்தை அவர்களே வழங்கவேண்டும். இதுமட்டுமல்லாமல் மாநில அரசுகளுக்கு அதிகாரத்தை அள்ளிக்கொடுக்கும் பல பரிந்துரைகள் இருக்கின்றன. பரிந்துரையின் முதல்பகுதி மட்டுமல்லாமல், மற்ற 2 பகுதிகளையும் பெற்று அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பவேண்டும். இந்த பரிந்துரைகளையெல்லாம் மத்திய அரசாங்கம் செயல்படுத்தினால் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற அழகிய மலரை பூத்து குலுங்கச் செய்த பெருமை தமிழகத்துக்கு கிடைக்கும். இந்த பொன்மொழி நாட்டை பிளவுபடுத்துவதற்காக அல்ல, வலுப்படுத்துவதற்காக. காலத்தால் அழியாதது இந்த தத்துவம் என்று கருணாநிதி சொன்னதில் அர்த்தம் உள்ளது.