கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு

தமிழக மக்கள் பெரும்பாலும் இறை நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். அதனால்தான் காலம்காலமாக ‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம், கோபுர தரிசனம், கோடி புண்ணியம்’ என்பதுபோன்ற பல பழமொழிகள் கோவிலை சுற்றியே கூறப்படுகின்றன.
கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு
Published on

தமிழ்நாட்டில் திருக்கோவில்கள் மக்களுக்கு இறைஅருள் பொழியும் புனித தலங்களாகவும், தமிழ் மண்ணின் பண்பாட்டை விளக்கும் சின்னங்களாகவும், பல்வேறு கலைகளின் களஞ்சியங்களாகவும், வரலாற்று சாட்சியங்களாகவும், சமூக பொருளாதார வளர்ச்சிக்கான தலங்களாகவும் காட்சியளிக்கின்றன. பழையகாலங்களில் ஏராளமான பக்தர்கள் தங்கள் வருவாயில் ஒருபகுதியை கோவிலுக்கு நிலங்களாகவும், மனைகளாகவும், கட்டிடங்களாகவும் தானமாக அளித்துள்ளனர். ஏராளமானவர்கள் தாங்கள் தானமாக எழுதிக்கொடுத்த வருவாய் இந்த காரியங்களுக்கு பயன்படுத்தவேண்டும் என்பதை தெளிவாக எழுதிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

ஆரம்பகாலத்தில் கோவிலில் சொத்து ஆக்கிரமிப்புகள், அதன் வருமானத்தை ஏமாற்றி கையாடல் செய்வதற்கும் மக்கள் பயந்து இருந்தனர். ஆனால், காலப்போக்கில் கோவில் சொத்தில் கைவைத்தால் நம்மை யார் கேட்கப்போகிறார்கள்? என்ற பயமின்மையால், ஏராளமான ஆக்கிரமிப்புகள், சட்டவிரோதமான குடியேற்றங்கள் எனவும், குத்தகையை கொடுக்காமலும் ஏமாற்றிவிடுகிறார்கள். பொதுவாக தனியார் சொத்தை குத்தகைக்கு எடுப்பவர்கள் ஒழுங்காக குத்தகையை கொடுத்துவிடுவார்கள். கோவில் சொத்தை குத்தகைக்கு எடுப்பவர்கள்தான் நிறைய பாக்கி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மட்டும் 36,606 திருக்கோவில்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், ஏராளமான மடங்கள், அறக்கட்டளைகள், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வராத நிறைய கோவில் சொத்துக்கள் இருக்கின்றன. பல தனியார் கோவில்களைக்கட்டி தங்கள் சொத்துக்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், சட்ட விரோதமாக கோவிலுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்கள், நில மாபியாக்கள் மீது சென்னை ஐகோர்ட்டின் கண்டன பார்வை விழுந்துள்ளது. சமீபத்தில் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ஒரு வழக்கில், கோவில்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்கள், நில அபகரிப்பாளர்கள், மாபியாக்கள் போன்ற சட்ட விரோதமாக கோவில் சொத்துக்களை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அவர்களை வெளியே அனுப்பி சொத்துக்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். நேர்மையான அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து, இதுபோன்ற சட்ட விரோத செயல்களை எல்லாம் கண்டறிந்து, அதற்கு துணைபோன அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், இந்துசமய அறநிலையத்துறை இணையதளத்தில் குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் பற்றிய விவரம், குத்தகை காலம், அதற்கான குத்தகை மற்றும் வாடகை தொகை எவ்வளவு? என்பதை குறிப்பிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும் குத்தகை மற்றும் வாடகை பாக்கி உள்ளவர்கள் பட்டியல், சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள் பட்டியல் எல்லாம் 3 மாத காலத்துக்குள் வெளியிடவேண்டும் என்று கூறியுள்ளார். தமிழக அரசு உடனடியாக நமது திருக்கோவில்கள் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது?, அதில் ஆக்கிரமிப்புகள் எத்தனை?, அதை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பதெல்லாம் தெரிவிக்க இணையதளத்தில் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், உடனடியாக மீட்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com