கொரோனா நேரத்தில் ‘நீட்’ தேர்வு வேண்டவே வேண்டாம்

மாதங்கள் உருண்டோடிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், கொரோனா பாதிப்பு மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை.
கொரோனா நேரத்தில் ‘நீட்’ தேர்வு வேண்டவே வேண்டாம்
Published on

ஜனவரி மாதம் இந்தியாவில் காலெடுத்து வைத்த கொரோனா, இன்றுவரை கட்டுக்குள்வர மறுக்கிறது. மராட்டியத்திற்கு அடுத்தாற்போல் தமிழ்நாட்டில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. ஏதோ கொரோனா பாதித்தது, சில நாட்களில் சரியாகிவிட்டது என்றநிலை மாறி, உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதிகமாக கூட்டம் கூடினால் கொரோனா பரவல் அதிகமாகிவிடும் என்ற அச்சத்தால், அலுவலகங்கள், திருமணங்கள், இறுதி ஊர்வலங்கள், கடைகள் என்று எல்லா இடங்களிலும் கூட்டம் கூடாமல் தவிர்க்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்த நேரத்தில், செப்டம்பர் மாதம் 13-ந்தேதி நீட் தேர்வு நடத்துவதாக மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. தமிழக அரசு உள்பட பல மாநில அரசுகள், பள்ளிக்கூட, கல்லூரி படிப்புகளில் இறுதித்தேர்வுகளை ரத்து செய்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்தியா முழுவதும் கோரிக்கை விடப்பட்டிருந்தது. நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வையும், ஜே.இ.இ. என்று சொல்லப்படும் இணை நுழைவுத்தேர்வையும் ஒத்திவைக்கமுடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துவிட்டது. இது மாணவர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்படும் என்று, எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோயம்புத்தூரை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, நீட் தேர்வு பயத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எல்லோரையும் சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து, அனுதாப செய்தி வெளியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது என்று கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். கனிமொழி எம்.பி., கொரோனா காரணமாக இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். எல்லோருடைய கோரிக்கையும் இதுதான். இந்தியா முழுவதும் நீட் தேர்வை எழுத 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேர் விண்ணப்பித்துள்ளனர். கொரோனா பரவல் வேகமாக நடக்கும் நேரத்தில், மாணவர்கள் தேர்வு மையத்தில், ஒரே இடத்தில் உட்கார்ந்து தேர்வு எழுதுவது நிச்சயமாக கொரோனா பரவலின் வாசலை திறந்துவைப்பதுபோல் ஆகும். மாணவர்களின் உயிர்தான் முக்கியம். நீட் தேர்வை வேண்டுமானால் அடுத்த ஆண்டு நடத்திக்கொள்ளுங்கள் என்பது பெற்றோரின் அபயக்குரல். ஏற்கனவே தமிழக சட்டசபையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களை ஜனாதிபதி நிறுத்திவைத்திருக்கிறார் என்ற காரணத்தைக்கூறி, மத்திய அரசாங்கம் திருப்பி அனுப்பியுள்ளது. என்ன காரணத்திற்காக நிறுத்தி வைத்திருக்கிறார் என்று தமிழக அரசு திரும்பத்திரும்ப கேட்டும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. காரணத்தை மட்டும் தெரிந்துகொண்டு, உடனடியாக தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றி நீட் தேர்வை இந்த ஆண்டு மட்டுமாவது ரத்துசெய்ய வேண்டும். நாடாளுமன்ற கூட்டம் நடப்பதையே நமது எம்.பி.க்கள் வேண்டாம், இணையதளம் மூலமாக நடத்துங்கள் என்று கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இளம் பிஞ்சுகளை வரவழைத்து நீட் தேர்வை நடத்துவதற்கு என்ன அவசியம் இப்போது வந்தது? என்பதை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாணவர்களுக்காகவும் கேட்டு மத்திய அரசாங்கத்தையும் ஒரு அவசர சட்டம் கொண்டுவந்து, நாடு முழுவதும் நீட் தேர்வை நிறுத்தச்சொல்ல வேண்டும். மத்திய அரசாங்கம் அதை செய்யாத பட்சத்தில் தமிழக மாணவர்களை காப்பாற்றும் பொறுப்பில் உள்ள தமிழக அரசு, உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பித்து, நீட் தேர்வை நடத்தக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com